முதியவரை காக்க வைத்த ஊழியர்களுக்கு 20 நிமிடங்கள் நிற்க வைத்து நூதன தண்டனை: ஐஏஎஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு
நொய்டா: நொய்டா நியூ ஓக்லா தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்தில் முதியவரை காக்க வைத்திருந்த ஊழியர்களை 20 நிமிடங்கள் நிற்க வைத்து தண்டனை ெகாடுத்த ஐஏஎஸ் அதிகாரியை பலரும் பாராட்டி வருகின்றனர். டெல்லியின் நொய்டா நியூ ஓக்லா தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கண்காணிப்பார்.
இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்யும் போது, முதியவர் ஒருவர் தனது கோரிக்கை தொடர்பான மனுவை அங்குள்ள ஊழியர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் முதியவரை 20 நிமிடங்களுக்கு மேலாக காத்திருக்க வைத்துள்ளனர். அவருக்கு இருக்கை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. அதனால் அந்த முதியவர் 20 நிமிடமும் கால்கடுக்க நின்றிருந்தார். அதை சிசிடிவி கேமரா மூலம் பார்த்த ஆணைய அதிகாரி கோபமடைந்தார். அடுத்த நாள் அனைத்து ஊழியர்களும் பணிக்கு வந்த பின்னர், அந்த அலுவலகத்தில் பணியாற்றிய 16 ஊழியர்களையும் 20 நிமிடம் அவரவர் இருக்கைக்கு அருகே நின்றிருக்க உத்தரவிட்டார்.
அதேபோல் பொதுமக்கள் முன்னிலையில், அலுவலகத்திற்குள் 16 ஊழியர்களும் நின்றனர். அதிகாரியின் இந்த செயலை அங்குள்ள மக்கள் பாராட்டினர். மேலும், முதியவர்களை இனிமேல் காத்திருக்க வைத்திருக்க கூடாது என்றும், முதியவர்கள் கவுண்டரில் நின்றால், அவர்களுக்கு உரிய இருக்கை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றும், அவர்களை காத்திருக்க வைக்கக்கூடாது என்றும் கூறினார். தலைமை நிர்வாக அதிகாரி தனது ஊழியர்களை நிற்க வைத்து தண்டிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.