Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குத்தகை காலம் முடிவடைந்தும் ரூ.38.85 கோடி செலுத்தாததால் எஸ்.ஆர்.எம் ஓட்டல் மீது நடவடிக்கை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் விளக்கம்

சென்னை: குத்தகை காலம் முடிவடைந்தும் ரூ.38.85 கோடி குத்தகை தொகையை செலுத்தாததால் அரசாணை மற்றும் ஒப்பந்தத்தின்படி முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு கிராமத்தில் 4.70 ஏக்கர் பரப்பளவில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள நிலம் எஸ்.ஆர்.எம் ஓட்டல் நிறுவனத்திற்கு, கடந்த 1994ம் ஆண்டில் 30 வருட காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த இடம் குத்தகைதாரருக்கு 1994 ஜூன் 14ம் தேதி ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும் சம்மதித்து கையெழுத்திடப்பட்ட இந்த குத்தகை ஒப்பந்தம் கடந்த 13ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. 1994ம் ஆண்டு குத்தகை வழங்கப்பட்ட அரசாணையின்படி, நிலத்திற்கு சந்தை விலையின் அடிப்படையில், 7 சதவீதம் வருடாந்திர குத்தகை தொகை கணக்கிட்டு, திருச்சி மாவட்ட ஆட்சியர் 30 ஆண்டு காலத்திற்கு குத்தகை தொகை ரூ.47,93,85,941 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதில், இன்றைய தேதி வரை குத்தகைதாரரான எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் செலுத்திய தொகை ரூ.9,08,20,104 மட்டுமே. மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ.38,85,65,837ஐ குத்தகைதாரர் இதுவரை செலுத்தவே இல்லை. இவ்வாறு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் 30 ஆண்டுகளாக முழுமையான குத்தகை தொகையை செலுத்தாமல் எஸ்.ஆர்.எம். நிறுவனம் தனது ஓட்டலை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

குத்தகை ஒப்பந்தத்தில், 30 வருட காலத்திற்கு மட்டும் தான் குத்தகைக்கு விடப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் குத்தகை காலத்தை மேலும் நீட்டிக்க ஒப்பந்தக்காரர் கோரக் கூடாது என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குத்தகை முடியும் நாளில் குத்தகைதாரரால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு எவ்வித நிபந்தனையுமின்றி நிலம் மற்றும் கட்டிடங்களை எவ்வித சேதாரமுமின்றி ஒப்படைக்க வேண்டும் என ஒப்பந்தத்தின் சாராம்சத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிலுவைத் தொகையை செலுத்த மே 2ம் தேதி குத்தகைதாரருக்கு எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், குத்தகை காலம் முடிவடைகிறது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒப்பந்தக்காரரால் நாளது தேதி வரை நிலுவைத் தொகை ரூ.38,85,65,837 செலுத்தப்படாமல் இன்னும் நிலுவையாகவே உள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, சில ஊடகங்களில் எஸ்.ஆர்.எம். ஓட்டல் சார்பாக தவறான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குத்தகை காலம் முடிவடைந்ததாலும், குத்தகைதாரர் முறையாக, முழுமையான குத்தகை தொகையை செலுத்தாததாலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அரசாணை மற்றும் ஒப்பந்தத்தின்படி தான் முறையான நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.