Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றி

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, தமாகா, நாம்தமிழர் கட்சிகள் உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில், நடந்த முடிந்த தேர்தலில் 14 லட்சத்து 35 ஆயிரத்து 243 பேர் வாக்களித்தனர். வாக்கு சதவீதம் (60.21%). தேர்தல் வாக்கு எண்ணிக்கை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் நேற்று காலை தொடங்கியது. தேர்தல் நடத்தும் அதிகாரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், தேர்தல் பார்வையாளர் அபிஷேக் சந்த்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

காலை 8.20க்கு தபால் வாக்குகள் எண்ண தொடங்கினர். அதே நேரத்தில் வாக்கு இயந்திரங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 10 மணி அளவில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியானது. முதல் சுற்றிலேயே திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 15,934 வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார். இறுதிச்சுற்று வரையில் அவரே முன்னணியில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை 28 சுற்றுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அதையும் தாண்டி 32 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் தபால் ஓட்டுகள் 6001 பதிவாகி இருந்தன.

அதில் 447 செல்லாதவை. தபால் ஓட்டில் திமுக 2,940, அதிமுக 1,033, தமாகா 927, நாதக 302 பெற்றிருந்தனர். இறுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.ஆர்.பாலு, 7 லட்சத்து 55 ஆயிரத்து 671 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், வெற்றிச் சான்றிதழை வேட்பாளர் டி.ஆர்.பாலுவிடம் வழங்கினார். அப்போது தேர்தல் கண்காணிப்பாளர் அபிஷேக் சந்திரா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் கருணாநிதி, காரப்பாக்கம் கணபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.