*போலீசார் விசாரணை
ஸ்ரீமுஷ்ணம் : கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கொண்டசமுத்திரம் ஊராட்சி புது தெருவில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயிலின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து சுவாமி அணிந்திருந்த நகை மற்றும் உண்டியல் பணம் திருடுபோனது தெரிந்தது.
இது தொடர்பாக சோழத்தரம் காவல் நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்ததின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சுவாமி கழுத்தில் இருந்த 11 கிராம் நகைகள் திருடுபோனதும், கோயில் உண்டியலை திருடிச்சென்று ஏரி கரையில் போட்டுவிட்டு மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக கொண்டசமுத்திரம் பகுதியை சேர்ந்த சகஜானந்தன் (55) சோழத்தரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையில் கைரேகை, தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.