Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பணியின்போது இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் தூய்மை பணியாளருக்கு சிறப்பு திட்டங்கள்: தினமும் காலை உணவு; 30,000 பேருக்கு இலவச வீடு; முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது, தினமும் காலை உணவு மற்றும் 30 ஆயிரம் பேருக்கு இலவச வீடு வழங்குவது உள்ளிட்ட 6 சிறப்பு சலுகைகள் வழங்குவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே தொடக்கத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் தேர்தல் பணிகள் தொடங்குவதற்குள் சில முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக அரசு முயற்சித்து வருகிறது. சமீபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ ஆகிய 2 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், மூத்த அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, சாமிநாதன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.

கூட்டம் முடிந்ததும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது: இன்று (நேற்று) நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்விற்காக பல சிறப்பு நலத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி, அறிவிப்புகளை செய்திருக்கிறார். பொதுவாக, தூய்மைப்பணியாளர்களின் நலவாழ்வில் திராவிட மாடல் ஆட்சியான திமுக அரசு எந்த அளவிற்கு பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். 2007ம் ஆண்டு கலைஞர் முதல்வராக ஆட்சி பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் தான், தூய்மைப்பணி நலவாரியம் ஏற்படுத்தப்பட்டு, தூய்மைப்பணியாளர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அந்த நலவாரியத்திற்கான உரிய நிதியை நல்கியதும் அரசு முறையான வகையில் வழங்கி, அந்த நலவாரியம் சிறப்பாக செயல்படவும், அந்த நலவாரியத்தின் திட்டங்கள், நன்மைகள் அது வழங்கக்கூடிய நலன்கள், தூய்மைப் பணியாளர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் தருவதை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பொதுவாக, தூய்மைப்பணியாளர்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்களின் நலனிலும் திமுக அரசு பெரும் கருணை கொண்டதாகவே இருக்கிறது. அங்கன்வாடி பணியாளர் ஒருவருடைய குடும்பத்திற்கும் அதே ரூ.1 கோடி இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தான் தூய்மைப்பணியாளர்கள் அவர்களுக்கான குறிப்பிட்ட சிறப்பு திட்டங்களை அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மேற்கொண்டு, அதை உங்களிடத்தில் இங்கே தெரிவிக்கிறேன்.

அதன்படி,

* தூய்மைப்பணியாளர்கள் குப்பை கையாளும்போது அவர்களுக்கு நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இத்தகைய தொழில்சார் நோய்களை கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

* தற்போது தூய்மைப்பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு தூய்மைப்பணியாளர் நலவாரியத்தின் மூலமாக, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களின் எதிர்கால நலன்களையும், வாழ்வாதாரத்தையும் முழுமையாக உறுதி செய்யக்கூடிய வகையில், இந்த நிதியுதவியுடன் கூடுதலாக இந்த பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் அளவிற்கு காப்பீடு இலவசமாக வழங்கப்படும். இதனால், பணியின்போது இறக்க நேரிடும் தூய்மைப்பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படும்.

* தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சமூக பொருளாதார நிலையினை உயர்த்திட சுய தொழில் தொடங்கும்போது, அத்தொழில் திட்ட மதிப்பீட்டில், 35 விழுக்காடு நிதி அதிகபட்சமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். மேலும், இந்த கடனுதவியை பெற்று தொழில் தொடங்கி கடன் தொகையை தவறாமல் திருப்பிச் செலுத்துவோருக்கு 6 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இந்த புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் பயின்றாலும், அவர்களுக்கு உயர் கட்டண சலுகைகள் மட்டுமின்றி, விடுதி கட்டணம், புத்தக கட்டணங்களுக்கான உதவித் தொகையை வழங்கிடும் வகையில், ‘புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம்’ ஒன்று செயல்படுத்தப்படும்.

* நகர்ப்புறங்களில், சொந்த வீடு இல்லாத தூய்மைப்பணியாளர்களுக்கு வரும் மூன்று ஆண்டுகளில், தூய்மைப்பணியாளர் நலவாரியத்தின் உதவியோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்கள், தூய்மைப்பணியாளர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் என பல்வேறு முறைகளின் கீழ் 30,000 குடியிருப்புக்கள் கட்டித் தரப்படும். கிராம பகுதிகளில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் இந்த வீட்டு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.

* தூய்மைப்பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இந்த 6 முக்கியமான அறிவிப்புகள் தூய்மைப்பணியாளர்களின் நலனுக்காக முதல்வர் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் திட்டங்களை சிறப்பாக அறிவித்திருக்கிறார். எனவே, நான் அரசின் சார்பில் கேட்டுக்கொள்வது, தூய்மைப்பணியாளர்கள் உங்களுடைய உணர்வுகளை மதிக்கக்கூடிய முதலமைச்சராக உங்களுக்கான நலத் திட்டங்களை உருவாக்க வேண்டிய அதை முன்னுரிமை அடிப்படையில் சிந்தித்துக் கொண்டிருக்கக்கூடிய உங்கள் நலனுக்காக முதல்வர் அறிவித்திருக்கக்கூடிய இந்த திட்டங்களின் பின்னணியில் அரசு உங்கள் மீது கொண்டிருக்கக்கூடிய அக்கறையை மனதில் வைத்து பொதுமக்களுடைய நலனை கருதி,

அதேபோல உங்களுடைய மற்ற கோரிக்கைகளை எல்லாம் மனதில் வைத்து நீங்கள் உங்களுடைய வேலைநிறுத்தத்தை விடுத்து பணிகளுக்கு திரும்பி அந்த பணிகளில் ஈடுபடத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அமைச்சரவை கூட்டத்தில், தமிழக அரசின் அடுத்தக்கட்ட திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து விவாதித்து முடிவு எடுப்பது, முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் முதல் வாரம் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்வது குறித்தும், அங்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.