குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள், பணியாளர்கள் 107 பேருக்கு 20 மாதமாக சம்பளம் இல்லை
*வேலூர் கலெக்டரிடம் குறைதீர்வு கூட்டத்தில் மனு
வேலூர் : குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள், பணியாளர்கள் 107 பேருக்கு 20 மாதமாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ மாலதி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கலியமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமசந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, ஆர்டிஓக்கள் கவிதா, சுபலட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து பொதுமக்களிடமிருந்து இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
வேலூர் சுந்தரேசகோயில் மானியம் பகுதி சுந்தராம்பாள் அளித்த மனுவில், வறுமைகோட்டிற்கு கீழ் வசித்து வருகிறேன். எனக்கு மகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் (30) என்ற மகன் உள்ளனர். எனக்கு எவ்வித வருமானமும் இல்லை. என்மீது இரக்கம் கொண்டு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எனது மகனுக்கு ஆதார் கார்டு இல்லாததால் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, உதவி தொகை எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு மைய ஆசிரியர்கள், பணியாளர்கள் அளித்த மனுவில், வேலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்கள் நடைபெற்று வந்தன. கடந்த மார்ச் 2023ம் ஆண்டு மத்திய அரசு சிறப்பு பயிற்சி மையங்களை மூடிவிட்டன. இத்திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 107 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 மாதமாக சம்பளம் வழங்கவில்லை, கல்வி உதவித்தொகை, பள்ளிகட்டிட வாடகை வழங்கப்படவில்லை. பல நினைவூட்டல் மனு கொடுத்தும் பயனில்லை.
ஆம்பூரில் பணிபுரிந்த பணியாளர் கிரி என்பவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை வாசுகி ஊதிய பிரச்னையால் இருதய பாதிப்பு ஏற்பட்டு இறந்துபோனார். எனவே மத்திய அரசு ெதாழிலாளர் துறை மூலம் எங்களுக்கு 20 மாதம் உதவித்தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
வேலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 30 பேர் அளித்த மனுவில், ஒரு ‘ஆன்லைன் ஆப்ஸ்’ மூலம் நாங்கள் தேவையான பொருட்களை ஆன்லைனில் வாங்கி வந்தோம்.
அதன்மூலம் சிறு தொகையை சம்பாதித்து வந்தோம். ஆப்ஸ் முடக்கியதால், கடந்த சில மாதங்களாக வருமானம் தடைப்பட்டுள்ளது. ஆப்ஸ் தொடர்பாக பொய் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதனை பயன்படுத்தி கோவையை சேர்ந்த ஒருவர், மக்களை வேறு வகையில் தூண்டிவிட்டு தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்குகிறார்.
மக்களை தற்கொலைக்கு தூண்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.
முன்னதாக குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின்கீழ் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹7.16லட்சம் செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார். மாவட்டத்தில் நேற்று மொத்தம் 441 கோரிக்கை மனுக்களை பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
13 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
எஸ்எஸ்ஐ சகோதரருடன் மனுகே.வி.குப்பம் அடுத்த காளாம்பட்டு கிராமத்தை சேர்ந்த சாந்தாம்மாள், அண்ணாதுரை, தரன் எஸ்எஸ்ஐ இவர்கள் அளித்த மனுவில், கே.வி.குப்பம் காளாம்பட்டு கிராமம் ஆதிதிராவிடர் பகுதியில் வசித்து வருகிறோம். எனது மாமனார் பெயரில் உள்ள சொத்து சர்வே எண் தவறுதலாக மாறியுள்ளது.
அதனை மாற்றி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். அதேபோல் அண்ணாதுரை அளித்த மற்றொரு மனுவில், எனது தந்தை குப்பன் பெயரில் உள்ள காலி மனையில் 1996ல் பஞ்சயாத்து சார்பில் எங்களை மிரட்டி மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டிவிட்டனர். ஆனால் கடந்த 13 ஆண்டாக அந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி பயன்பாட்டில் இல்லை. எங்களுக்கு சொந்தமான காலிமனையை எங்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 13 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று எஸ்எஸ்ஐ அவரது சகோதரருடன் மனு அளித்தார்.
கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்கள்
குறைதீர்வு கூட்டத்தின்போது, சேண்பாக்கத்தை சேர்ந்த பத்மா(50) என்பவர் வீட்டுமனை கேட்டு மனு அளிக்க வந்தார். அவர் திடீரென கூட்ட அரங்கிலேயே மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மனு அளித்தார். அவரிடம் கேட்டபோது காலையில் சாப்பிடவில்லை. சாப்பிடவும் வழியில்லை அதனால் மயங்கி விழுந்ததாக தெரிவித்தார்.
அதேபோல் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த லலிதா(50) என்ற மாற்றுத்திறனாளி பெண் தனக்கு வீல்சேர் வழங்கக்கோரி மனு அளிக்க வந்தார். அவரும் கூட்ட அரங்கிற்கு வெளியே நடக்க முடியாமல் கீழே விழுந்தார். இதையடுத்து அவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ரத்தபரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்திற்கு பின்னர்அவர் மனு அளித்தார்.