Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவதூறாக பேசிய பாஜவுடன் இன்னும் உறவு வைக்க எஸ்.பி.வேலுமணி விரும்புவது ஏன்? செல்வப்பெருந்தகை கேள்வி

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு மையத்தில் 24 மணி நேரமும் சிசிடிவி வைத்து கண்காணிக்கப்பட்டுள்ளது. அங்கு எந்தவிதமான தவறும் நடக்கவில்லை.

நடப்பதற்கான வாய்ப்பும் இல்லை. சந்தேகம் இருந்திருந்தால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு இருக்கலாம். ஆனால், இரவெல்லாம் யோசித்து விட்டு சென்னைக்கு வந்தவுடன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா காங்கிரஸ் மீது அவதூறு பரப்புகிறார். இதை அவர் தவிர்க்க வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி, ‘அதிமுக-பாஜ சேர்ந்திருந்தால் பல தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம்’ என கூறியிருக்கிறார்.

பாஜவுடன் சேர்ந்திருந்தால் இந்த வாக்குகளை கூட அதிமுக பெற்றிருக்க முடியாது. எப்படி இந்த ஆசை அவருக்கு வந்தது என தெரியவில்லை. அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து அவதூறு பரப்பிய பாஜ உடன் இன்னும் உறவு வைக்க விரும்புவதன் நோக்கம் என்ன?. கொங்கு மண்டலத்தில் சில இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜ எப்படி வாக்கு வாங்கியது என்று இப்போதுதான் தெரிகிறது.

எந்த கட்சி ஆணவத்துடன் இருந்தாலும் அதை மக்கள் ஒதுக்கி விடுவார்கள் என்பதற்கு சாட்சியாக இந்த தேர்தலில் மக்கள் பாஜவுக்கு பாடம் புகட்டி இருக்காங்க.. உத்தரபிரதேசத்தில் மோடிக்கு எவ்வளவு பின்னடைவுன்னு பாஜ சிந்திக்க வேண்டும். மோடியின் வெறுப்பு பிரசாரத்தின் முடிவு தான், மக்கள் தேர்தல் முடிவில் தெரிவித்து இருக்கிறார்கள்.

இன்னும் ஓரிரு வாரங்களில் தேசத்தை பாதுகாக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணி ஆலோசனை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன், துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

* திமுக கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்பராயன், செல்வராஜ் மற்றும் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனுக்கு வந்தனர். அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு அவர் சால்வை அணிவித்து பாராட்டினார்.