Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தெற்கு ரயில்வேயின் மொத்த பாதை தூரமான 5,116 கிலோ மீட்டர் தூரத்தில் 4,995 கி.மீ. மின்மயமாக்கம்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: தெற்கு ரயில்வேயின் மொத்த பாதை தூரமான 5,116 கிலோ மீட்டரில் 4,995 கிலோ மீட்டர் மின்மயமாக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:  தெற்கு ரயில்வே இந்த மாதம் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை மின்சார சேமிப்பு வார விழாவை கொண்டாடி வருகிறது. இந்திய அரசின் மின்சார அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14ம் தேதியை மின்சார சேமிப்பு தினமாக கொண்டாடுகிறது.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இந்த தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே தனது 6 பிரிவுகள் மற்றும் பணிமனைகளில் விரிவான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரிடையேயும் மின்சார சேமிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

மின்சார சேமிப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே தலைமையகம், பிரிவுகள், பணிமனைகள் மற்றும் களப் பிரிவுகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மின்சார சேமிப்பு தொடர்பான கட்டுரை எழுதும் போட்டிகள் மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன. மின்சார சேமிப்பு மற்றும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்த கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு கல்வி துண்டுபிரசுரங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், மின்சாரத்தை திறம்பட பயன்படுத்தும் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

* 100% மின்மயமாக்கல் இலக்கு

வரும் 2030க்குள் 100 சதவீதம் மின்மயமாக்கல் என்ற இலக்கை அடைவதில் தெற்கு ரயில்வே தீவிரமாக செயல்படுகிறது. தற்போது, தெற்கு ரயில்வேயின் மொத்த பாதை தூரமான 5,116 கிலோ மீட்டரில் 4,995 கிலோமீட்டர் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இது 97.63 சதவீதம் ஆகும். தெற்கு ரயில்வே தற்போது 6.75 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சார உற்பத்தி வசதிகளை கொண்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை 4.08 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2.86 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

சூரிய மின்சார திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 35.81 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ரூ.18.94 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே 10.5 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்சார உற்பத்தி வசதிகளை கொண்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் நவம்பர் வரை 24.24 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ரூ.17.87 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மின்சார திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து மொத்தம் 179.09 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ரூ.111.68 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மின்சார திறன் பணியகம் வழங்கும் “சூன்யா” மற்றும் “சூன்யா+” சான்றிதழ்கள் மின்சார திறன் மிக்க கட்டிடங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை வெளி மின்சாரத்தை பயன்படுத்தாமல், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மூலம் இயங்கும் கட்டிடங்கள் ஆகும்.

தெற்கு ரயில்வேயில் இரண்டு கட்டிடங்கள் “சூன்யா+” சான்றிதழும், ஏழு கட்டிடங்கள் “சூன்யா” சான்றிதழும் பெற்றுள்ளன. மேலும் 5 கட்டிடங்கள் 2025-26 நிதியாண்டில் சூன்யா சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயின் அனைத்து இடங்களிலும் பழைய விளக்குகளுக்கு பதிலாக 100 சதவீதம் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகள் பெட்டிகள், அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே குடியிருப்புகளில் 34,488 பிஎல்டிசி மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை பழைய மின்விசிறிகளை விட மின்சாரத்தை மிச்சப்படுத்துகின்றன. ரயில் நிலைய விளக்குகள், தெரு விளக்குகள் மற்றும் முற்ற விளக்குகளுக்கு நேர அமைப்பான் பொருத்தப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கை முறை கட்டுப்பாடு வசதியும் உள்ளது. வெல்டிங் இயந்திரங்கள் மற்றும் காற்று சுழற்சிகளுக்கு மின்சார சேமிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மின்தூக்கிகள், படிக்கட்டு இயந்திரங்கள், பேட்டரி சார்ஜர்கள், கொக்கிகள் மற்றும் பெட்டி உற்பத்தி சோதனைக்கு விவிவிஎப் இயக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மொத்தம் 66 யூனிட்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் 3,846 உயர் திறன் கொண்ட குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அலுவலக அறைகள் மற்றும் கூட்ட அரங்குகளில் மின்சாரத்தை குறைக்க தானியங்கி உணர்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. யாரும் இல்லாத போது இவை தானாகவே விளக்குகள் மற்றும் ஏசியை அணைத்துவிடும். மொத்தம் 576 அறைகளில் இவை பொருத்தப்பட்டுள்ளன.

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலமும், திறன் மிக்க அமைப்புகளுக்கு மாறுவதன் மூலமும் ஊழியர்களிடையே மின்சார சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமும், தெற்கு ரயில்வே தொடர்ந்து நிலையான மின்சார நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இது ரயில் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு பயனளிக்கிறது.