Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தென்ஆப்ரிக்காவிடம் போராடி தோல்வி; டாப் ஆர்டரில் பொறுப்புகளை உணர்ந்து ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி

விசாகப்பட்டினம்: 13வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடந்த 10வது லீக் போட்டியில் இந்தியா-தென்ஆப்ரிக்கா மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 49.5 ஓவரில் 251 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 94 (77 பந்து), பிரதிகா ராவல் 37 ரன் அடித்தனர்.

பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா 81 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்த போதிலும், கேப்டன் லாரா வால்வார்ட் 70, க்ளோ ட்ரையன் 49 ரன் எடுத்து சரிவில் இருந்து மீட்டனர். கடைசி நேரத்தில் நாடின் டி கிளார்க் 54 பந்தில் 84 ரன் விளாசினார். முடிவில் 48.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன் எடுத்து தென்ஆப்ரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3வது போட்டியில் அந்த அணிக்கு இது 2வது வெற்றியாகும்.

நாடின் டி கிளார்க் ஆட்டநாயகி விருது பெற்றார். முதல் 2 போட்டியில் வென்ற இந்தியா முதல் தோல்வியை சந்தித்தது. தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், இரு அணிகளுக்குமே இது கடுமையான போட்டியாக அமைந்தது. 2 அணிகளுமே சிறப்பாக விளையாடின. நாங்கள் பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட் இழந்தோம். இருப்பினும் 250 ரன்னுக்கு மேல் எடுத்தது மகிழ்ச்சி அளித்தது.

பவுலிங்கில் ஆரம்ப கட்டத்தில் சில விக்கெட்டுகளை எடுத்தோம். ஆனால் டீ கிளார்க் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர்கள் பேட்டிங் செய்த விதத்தை பார்த்தால் ஏதோ வேறு ஆடுகளம் மாதிரி தெரிந்தது. எனினும் தென்ஆப்ரிக்கா வெற்றி பெற தகுதியானவர்கள். ரிச்சா அபாரமாக பேட்டிங் செய்தார்.

அவரின் ஆட்டத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து அவர் இதேபோல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறோம். பேட்டிங்கில் டாப் ஆர்டரில் பொறுப்புகளை உணர்ந்து ஆடவில்லை. இதை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த போட்டியில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம், என்றார்.