Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளஸ்-1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் வீட்டைவிட்டு வெளியேறிய மகனை கண்டுபிடித்து தர வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் தந்தை மனு

ராணிப்பேட்டை : வீட்டை விட்டு வெளியேறிய மகனை கண்டுபிடித்து தரவேண்டும் என தந்தை குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்துள்ளார். ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் 356 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கலெக்டர் சந்திரகலா கேட்டறிந்தார்.

மேலும் திட்ட இயக்குனர் ஜெயசுதா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் கீதா லட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஏகாம்பரம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைய நம்பி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் ஆகியோரும் பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

கூட்டத்தில் வாலாஜா வட்டம் அனந்தலை அடுத்த எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறேன். வாலாஜா அருகே வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் உள்ள மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு எனது 300 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்தனர்.

ஆனால் இதுநாள் வரை பில் போடாமல் நிலுவையில் உள்ளது. இதுவரை சுமார் 2,500 நெல் மூட்டைகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் உள்ளனர். நிலுவை பில் தொகை உடனே பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் வஜ்ஜிரவேல் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின் அடிப்படையில் பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் அந்த பயிர் கடன்கள் இரண்டு மடங்கு குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவுகளை சமாளிப்பதற்காக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் கடன் பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

விவசாயத்தில் சரியான வருமானம் இல்லாததால் வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சிபில் ரிப்போர்ட் என்கின்ற பிரச்னையில் விவசாயிகள் சிக்கிவதால் கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே விவசாயிகளின் ஒரே புகலிடமாக உள்ளது.

இனிமேல் கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களும் சிபில் ரிப்போட்ர்டில் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இனி விவசாயிகள் பயிர் கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

இதற்கிடையில், கூட்டுறவு சங்கங்களின் விவசாயிகளுக்கு பயிர் கடன் கொடுப்பதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவளர் மூலமாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எதிரான இந்த சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வாலாஜா வட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவனின் தந்தை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் பிளஸ்-1 படித்து வந்தான். கடந்த மாதம் பிளஸ்-1 பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் எனது மகன் குறைந்த மதிப்பெண் பெற்று விட்டதால் தேர்வு முடிவு வந்த அன்றைய தினமே வீட்டைவிட்டு சென்று விட்டான்.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக வாலாஜா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தேன். புகார் அளித்து 20 நாட்களுக்கு மேலாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே எனது மகனை கண்டுபிடித்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.