Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழுவில் கோஷ்டி மோதல், கடும் வாக்குவாதம்

சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 18வது பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடந்தது. தலைவர் சிவன் சீனிவாசன், பொதுச்செயலாளர் போஸ் வெங்கட் உள்பட 100க்கும் மேற்பட்ட சின்னத்திரை நடிகர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் ரவிவர்மா, ரவிசங்கர், எம்.டி.மோகன் ஆகியோரை மீண்டும் சேர்ப்பதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

சிவன் சீனிவாசன் பேசும்போது இணை செயலாளர் தினேஷ் கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது எதிரணி தரப்பில், ‘2022ல் சங்கத்தின் தலைவராக இருந்த ரவிவர்மா செய்த தவறுகளை சுட்டிக்காட்டி, கடந்த 5 வருடங்களாக சங்கத்தின் உறுப்பினர் சிலருக்கு வேலையிழப்பு, பேச நேரம் தரப்படவில்லை, அப்படி பேசினால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிடுகிறார்கள்’ என்பது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பிறகு இணை செயலாளர் தினேஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழுவில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட மருத்துவ திட்டத்தை மீண்டும் கொண்டு வரவில்லை. மெடிக்கல் கார்டு மூலம் சிகிச்சை பெற்ற தர் என்பவருக்கு தவறான சிகிச்சையால் ஒரு கண் பறிபோய்விட்டது. அது சம்பந்தமாக கடிதம் கொடுத்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்த சங்கம் தொழிலாளர்கள் நலத்துறையில் பதிவு செய்யப்பட்டது. இதுவரை யாருக்கும் வேலைவாய்ப்புக்காக எதையும் செய்யவில்லை. பேச அனுமதி இல்லை. ரவிவர்மா, எம்.டி.மோகன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். அதற்கு விளக்கமளிக்க முயன்றால் அனுமதிப்பது இல்லை. நான் பொறுப்பில் இருந்தாலும், என் கருத்தை பதிவு செய்ய அனுமதி இல்லை’ என்றார்.