சிவகங்கை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம்: மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்: 5 போலீசார் சிறையில் அடைப்பு
திருப்புவனம்: திருப்புவனம் அருகே போலீஸ் விசாரணையின்போது கோயில் ஊழியர் இறந்த சம்பவம் தொடர்பாக எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, கொலை வழக்கில் 5 போலீஸ்காரர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த சிவகாமி (73), மகள் நிகிதாவுடன் (48) கடந்த ஜூன் 28ம் தேதி, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்தபோது அவரது காரில் இருந்த 10 பவுன் நகை திருடப்பட்டது.
புகாரின்படி கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை (27), மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் வேனில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றும், கோயில் நிர்வாக அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் கட்டி வைத்தும், அடித்து விசாரித்தபோது அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அஜித்குமாரை வேனில் ஏற்றி, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக எஸ்பி ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்திய நிலையில், மானாமதுரை குற்றப்பிரிவு தலைமைக்காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்தன், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே அஜித்குமாரின் குடும்பத்தினர், உறவினர்கள் சம்பவத்தில் தொடர்புடைய 6 போலீஸ்காரர்களையும் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில் இவ்வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. சஸ்பெண்டான 6 போலீஸ்காரர்களில் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்தன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேச பிரசாத் முன்னிலையில் நேற்று அதிகாலை 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக இருந்த ஆஷிஷ் ராவத்தை சென்னை டிஜிபி அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக இருந்த சந்தீஷுக்கு, சிவகங்கை மாவட்ட எஸ்பி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுளளது. மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


