Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Wednesday, August 13 2025 Epaper LogoEpaper Facebook
Wednesday, August 13, 2025
search-icon-img
Advertisement

கட்டிடங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் விரைவான அனுமதி; 15 முதல் 30 நாட்களுக்குள் என்ஓசி வழங்க வேண்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: கட்டிடங்கள், லேஅவுட்கள், குடியிருப்புகளுக்கு அரசின் தடையில்லா சான்றிதழ் பெற (என்ஓசி) ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கும் வகையில், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 15 முதல் 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. குடிசையில்லா தமிழகமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஒரு கட்டிடம் கட்ட இடையூறாக இருப்பது அரசு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதுதான். வீடு வாங்குவதில் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக ஆவணங்கள் இருக்கின்றன. இவற்றில் பட்டா, தொடக்க சான்றிதழ், விற்பனை ஒப்பந்தம் போன்ற ஆவணங்களைப் போல தடையில்லாச் சான்றிதழும் முக்கியமாக இருக்கிறது. குறிப்பாக என்ஒசி (NOC) என அழைக்கப்படும் இந்த ஆவணம் வீடு வாங்குபவரைவிட ரியல் எஸ்டேட் கட்டுநருக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது.

வாங்கும் வீடு எந்தச் சட்டப் பிரச்னையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள தடையில்லாச் சான்றிதழ் அவசியமாக இருக்கிறது. மேலும் ஒரு திட்டத்தின் கட்டுமானத்தைத் தொடங்கும்முன் 19 துறைகளில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். நீர்வளம், மின்சாரம், தீயணைப்பு, சுற்றுச்சூழல், விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட துறைகள் இதில் அடக்கம். இந்தத் துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற்ற பிறகுதான் கட்டுமான பணியைத் தொடங்க முடியும். இத்தனைத் துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்கு கால விரையம் ஏற்படுவதால் பெரும்பாலான திட்டங்கள் தாமதமடைவதாக பல்வேறு தரப்பினர் கருதுகின்றனர். அதனால், ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்க வேண்டுமென்று துறைசார் நிபுணர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

கடந்த ஆண்டுகளில் ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் பல்வேறு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 வருடங்கள் ஆகிவிடும். தற்போது தமிழக அரசு இதனை எளிதாக்கியது. அதன்படி கட்டிடம் கட்டுவதற்கு அரசு துறைகளிடம் இருந்து மக்கள் எளிதில் தடையில்லா சான்றிதழ் பெற, கடந்த 2022ம் ஆண்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பிரத்தியேகமாக இணையதளத்தை அரசு உருவாக்கியது. இந்த இணையதளம் வழியாக சிஎம்டிஏ ஒரு மாதத்திற்கு சராசரியாக 70 கட்டிடங்கள் தொடர்பான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து வருகிறது. அதேபோல ஆண்டுக்கு 70க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இது 2022க்கு முந்தைய ஆண்டு எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னை பெருநகரப் பகுதியில் கட்டிடங்கள், லேஅவுட்கள் மற்றும் உட்பிரிவு அனுமதிகளுக்கு என்ஓசி வழங்குவதற்கு மாநில மற்றும் ஒன்றிய ஏஜென்சிகள் உட்பட 24 துறைகள்தான் பொறுப்பு. இந்த அனைத்து துறைகளையும் அரசு உருவாக்கிய இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இதனை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மேலும் எளிதாக்கி உள்ளது. இந்த இணையதளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 15 முதல் 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: புவியியல் மற்றும் சுரங்கம், நீர்வளத்துறை, மெட்ரோ, வீட்டுவசதி வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் உட்பட 19 துறைகள், அரசு கட்டிடம் தொடர்பாக தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்.

இதில் குறிப்பாக 9 அரசு துறைகள் 30 நாட்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கும். அத்துடன் மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சாதாரண கட்டிடங்களுக்கு 15 நாட்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கும். குறிப்பாக முதல் 7 நாட்களுக்கு கட்டிடம் கட்டும் இடத்தை ஆய்வு செய்து அடுத்த 3 நாட்களுக்கு ஆய்வு செய்து 10 நாட்களுக்குள் தடையில்லா சான்றிதழ் வழங்கும். தடையில்லா சான்றிதழ் வழங்கிய உடன் இதுகுறித்து துறையின் உயர் அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

உயர் அடுக்கு கட்டிடங்களுக்கு தீயணைப்பு துறை, 10க்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டிடங்களுக்கு விமான போக்குவரத்து துறையிடம் அனுமதி, மெட்ரோ ரயில் செல்லும் பாதைக்கு அருகில் இருந்தால் மெட்ரோ வழித்தடங்கள் பாதிக்கா வகையில் கட்டிடங்களை வடிவமைக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு அருகில் இருந்தால் நீர்வளத்துறையிடம் அனுமதி கோர வேண்டும். கடந்த காலங்களில் தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு பல மாதங்கள் எடுத்து கொண்ட நிலையில் தற்போது 15 முதல் 30 நாட்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வழிவகை ெசய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் முதலீட்டுக்கு வாய்ப்பு

கட்டிடம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட துறையிடம் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை என்றால் அதனை அனுமதி என எடுத்துக் கொள்ளலாம். 30 நாட்களுக்கு கட்டுமானத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படுவதால் வெளிமாநில மற்றும் பெரிய முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன் வருவார்கள் என கட்டுமான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்