சிங்கப்பூர்: சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல் மே 3ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி 32 புதிய வேட்பாளர்களை களம் இறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் இங் இங் ஹென், தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மே 3ம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.
66 வயதான இங் இங் ஹென் இதுபற்றி கூறுகையில்,’ என்னைப் போன்ற மூத்த அரசியல்வாதிகளுக்கு, நாங்கள் புதியவர்களாக வந்தபோது நாங்கள் கண்ட உதாரணங்களைப் பின்பற்றுவதும் ஒரு நற்பண்பு என்று நான் நினைக்கிறேன். வயதானவர்கள் புதியவர்களுக்காக ஒதுங்கவில்லை என்றால், நீங்கள் எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டாம். அது மிகவும் எளிது. ஆனால் பிஏபி கட்சி எதிர்காலத்திற்காக தயாராவதால் நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்’ என்றார். புற்றுநோயியல் நிபுணரான இங் இங் ஹென் 2001ல் அரசியலில் நுழைந்தார். 2011 முதல் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வருகிறார்.