Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வருகிற 28, 29ம் தேதி நடைபெற இருந்த எஸ்.ஐ தேர்வு திடீர் ஒத்திவைப்பு: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்

சென்னை: வருகிற 28, 29ம் தேதி நடைபெற இருந்த எஸ்ஐ தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) 933, ஆயுதப்படையில் 366 காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) காலியிடங்கள் என 1,299 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஏப்ரல் 4ம் தேதி வெளியிட்டது. தொடர்ந்து தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க மே 3ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தங்களை மே 13ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது இளங்கலை படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது கல்வி தகுதியாகும். இதை தொடர்ந்து தேர்வுக்கு இளங்கலை, முதுகலை பட்டம் படித்த பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். வழக்கமாக காவல் துறையில் 2ம் நிலை, முதல்நிலை மற்றும் தலைமைக் காவலர்களாக பணியில் உள்ளவர்களும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள். இவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். மீதமுள்ள 80 சதவீதம் பொதுத் தேர்வர்களுக்கானது.

அதாவது, உடல் தகுதியை நிரூபித்து காவலர் பணியில் சேர்ந்தவர்களுக்கு சட்டம் -ஒழுங்கு மற்றும் உளவியல் தொடர்பான கேள்விகள் மட்டுமே தேர்வில் இடம்பெறும். ஆனால், பொதுப்பிரிவில் வருபவர்களுக்கு எழுத்துத் தேர்வுடன் உடல் தகுதித் தேர்வு நடத்தப்படும். இந்த சூழலில், அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தேர்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே, சீனியாரிட்டி இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டது. இதனால், 20 சதவீத ஒதுக்கீட்டில் தேர்வாகும் காவலர்களுக்கு பின்னடைவு ஏற்படும் நிலை ஏற்பட்டது. எனவே, ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண் என்ற வகையில் தேர்வு நடத்தப்படுமா என்ற குழப்பம் தேர்வர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில், வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.