Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிறுமி பலாத்கார வழக்கில் திருப்பம்; தப்பியோட முயன்ற குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு: போலீஸ் நடத்திய என்கவுன்டரில் அதிரடி கைது

போபால்: மத்தியப் பிரதேசத்தில் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு போலீசாரைத் தாக்கி தப்பியோட முயன்ற முக்கிய குற்றவாளி காலில் சுட்டுப் பிடிக்கப்பட்டான். மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டம் கவுகஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட பாஞ்சாரா கிராமத்தில், கடந்த 21ம் தேதி 6 வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி, போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சல்மான் என்கிற நசா் என்பவரைப் பிடிக்க 6 மாவட்டங்களைச் சேர்ந்த 300 போலீசார் கொண்ட 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவனைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.30 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றவாளியைக் கைது செய்யத் தவறியதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஒரு வார தேடுதல் வேட்டைக்குப் பிறகு போபால் காந்தி நகர் பகுதியில் பதுங்கியிருந்த சல்மானை போலீசார் இன்று சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அங்கிருந்து மேல் விசாரணைக்காக அவனை ராய்சன் நோக்கி அழைத்துச் சென்றபோது, போஜ்பூர் அருகே உள்ள கீரத்நகர் பகுதியில் போலீஸ் வாகனம் பழுதாகி நின்றது. அப்போது ‘இயற்கை உபாதை கழிக்க வேண்டும்’ என்று சல்மான் கூறியதால் அவனை கீழே இறக்கியுள்ளனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கிருந்த உதவி ஆய்வாளரின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு அவன் தப்பியோட முயன்றுள்ளான்.

இதனால் சுதாரித்துக்கொண்ட போலீசார் தற்காப்புக்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சல்மானின் காலில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த அவனை உடனடியாக மீட்ட போலீசார், சிகிச்சைக்காக போபால் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவனது உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.