வாரணாசி ஐஐடி விடுதியில் அதிர்ச்சி; சக மாணவர்கள் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்தவர் சிக்கினார்:போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையால் பரபரப்பு
வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஐஐடி வளாகத்தில் உள்ள ஆண்கள் தங்கும் விடுதியில், கெமிக்கல் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த எம்.டெக் மாணவர் ஒருவர், சக மாணவர்கள் குளிப்பதை நீண்ட காலமாக ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார். குறிப்பாக விடுதியின் 8, 9 மற்றும் 10வது தளங்களில் தங்கியுள்ள மாணவர்களே குறிவைக்கப்பட்டுள்ளனர். விடுதியின் குளியலறைக்கு மேலிருந்து தனது செல்போன் மூலம் இந்த வீடியோக்களை அவர் பதிவு செய்து மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாணவர் ஒருவர் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்றபோது, குற்றம் சாட்டப்பட்ட மாணவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
அவரது செல்போனை சோதனையிட்டதில், 7 முதல் 8 சர்ச்சைக்குரிய வீடியோக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த ஐஐடி நிர்வாகம், மாணவரின் செல்போனைக் கைப்பற்றியது. ஆனால், பல மணி நேரமாகியும் குற்றம்சாட்டப்பட்ட மாணவர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாததால், மற்ற மாணவர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் லங்கா காவல் நிலையத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்ட மாணவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை, இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகம் தொடர்பான சம்பவம் எனக் கூறி, மேல் நடவடிக்கை எடுக்கத் தயங்கி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.