பருப்பு குழம்பு தரமில்லாததால் கேன்டீன் ஒப்பந்ததாரருக்கு ‘பளார்’ விட்ட சிவசேனா எம்எல்ஏ: மகாராஷ்டிராவில் பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் பருப்பு குழம்பு தரமில்லாததால் கேன்டீன் ஒப்பந்ததாரரை சிவசேனா எம்எல்ஏ ஒருவர் அறைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) எம்.எல்.ஏ.வான சஞ்சய் கெய்க்வாட், ஏற்கனவே பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி அசிங்கப்படுபவர் ஆவார். கடந்த ஆண்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நாவை வெட்டுபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்குவதாகக் கூறி பெரும் புயலைக் கிளப்பினார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி, கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தற்போதைய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் போன்ற தலைவர்களைத் தரக்குறைவாக விமர்சித்தும் செய்திகளில் இடம்பிடித்தவர் ஆவார்.
புல்தானா தொகுதி எம்எல்ஏவான இவர், தனது அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் தொடர்ந்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், மும்பையில் உள்ள ஆகாஷ்வானி எம்.எல்.ஏ குடியிருப்பில் தங்கியிருந்த சஞ்சய் கெய்க்வாட், அங்குள்ள கேன்டீனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். தனக்கு வழங்கப்பட்ட உணவின் பருப்புக் குழம்பு மிகவும் தரம் குறைந்து இருப்பதாக கூறி, கேன்டீன் ஒப்பந்ததாரருடன் வாக்குவாதம் செய்தார். பின்னர், அந்த உணவுப் பொட்டலத்தை ஒப்பந்ததாரரை முகரச் சொல்லிவிட்டு, திடீரென அவரது முகத்தில் ஓங்கிக் குத்தினார்.
அந்தத் தாக்குதலில் நிலைதடுமாறி ஒப்பந்ததாரர் கீழே விழ, மீண்டும் எழுந்த அவரை மறுபடியும் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரத்தை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எழுப்புவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஒப்பந்ததாரரை ஆளுங்கட்சி எம்எல்ஏ அறைந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.