மாதத்தில் 4 நாட்கள் வா... ரூ.10,000 தர்றேன்... பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக நிர்வாகி அதிரடி கைது: 3 குழந்தைகளின் தாய் அளித்த புகாரில் நடவடிக்கை
கெங்கவல்லி: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் கண்ணாடி மில் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (எ) சேகோ சங்கர் (38). அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளராக உள்ளார். இவர், ஆத்தூரைச் சேர்ந்த 3 குழந்தைகளின் தாயான 31 வயது பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு, தனது மாமியார் வீட்டில் இருக்கும் குழந்தைகளை அழைத்து வருவதற்காக நடந்து சென்றார். அப்போது, பைக்கில் சென்ற சேகோ சங்கர், அவரை வழிமறித்து ‘இனிமேல் இதுபோன்ற வேலைகளை நீ செய்ய வேண்டாம். மாதத்திற்கு 4 நாட்கள் மட்டும் அழைப்பேன். அப்போது நீ வந்தால் போதும். இதற்காக மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் கொடுக்கிறேன்,’ என கூறி அழைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதுகுறித்து தனது உறவினர்களிடம் செல்போனில் தெரிவித்துள்ளார். அவர்கள் வருவதற்குள் சேகோ சங்கர் தப்பி விட்டார். இச்சம்பவத்தினால் கடும் மனவேதனை அடைந்த அந்த பெண், இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார். இதையடுத்து, சேகோ சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த சேகோ சங்கர் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், நேற்று அதிகாலை காவல் நிலையம் அருகில் உள்ள வீட்டில், அவர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் எஸ்ஐ சிவசக்தி, தனிப்படை ஏட்டு சுந்தர்ராஜன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.


