பூந்தமல்லி: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினிமா துணை நடிகரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயலை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனின் பெற்றோர் நேற்று முன்தினம் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், பள்ளி விடுமுறை நாளில் ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு பூங்காவிற்கு தனது மகன் விளையாட செல்வது வழக்கம். அப்போது, அங்கிருந்த இளைஞர் ஒருவர், எனது மகனை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார்.
அதன்பேரில், அந்த பூங்காவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது மதுரவாயல், ஆலப்பாக்கத்தை சேர்ந்த அரி (21), என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை, அரி அழைத்துச் சென்று, தான் சினிமா துறையில் பணிபுரிந்து வருவதாகவும், பல்வேறு நடிகர்களுடன் பழக்கம் இருப்பதாகவும் கூறி அவர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்களை தனது செல்போனில் காண்பித்துள்ளார்.
பின்னர் அந்த நடிகர்களைப் பார்க்க அழைத்துச் செல்வதாக சிறுவனை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அரியை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் சினிமா துறையில் துணை நடிகராக நடித்து வருவதும் பூங்காவிற்கு வரும் சிறுவர்களை இது போன்ற சினிமா பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


