Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆய்வு; 501 மாணவிகளுக்கு தையல் எந்திரம், மடிக்கணினி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பெரம்பூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது கொளத்தூர் தொகுதியில் பல்வேறு பணிகளை துவக்கிவைத்து மாணவ, மாணவிகளுக்கு தையல் எந்திரம், மடிக்கணினிகளை வழங்கினார். முதல்வரும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மு.க.ஸ்டாலின், இன்று காலை தனது தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைக்கவும் பணிகளை பார்வையிடவும் வருகை தந்தார். அப்போது அவருக்கு பொதுமக்களும் கட்சி தொண்டர்களும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். சாலையில் இரண்டுபுறமும் திரண்டிருந்தவர்கள் முதல்வரை உற்சாகமாக வரவேற்றனர். கொளத்தூர் ராஜாஜி நகரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ 8.88 கோடி மதிப்பீட்டில் 27,525 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ள மூத்த குடிமக்களின் உறைவிட கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

ஜி.கே.எம் குடியிருப்பு அரிச்சந்திரா மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற மாணவ - மாணவிகள் 350 பேருக்கு தையல் இயந்திரம், 151 பேருக்கு மடிக் கணினி வழங்கினார். பார்வை திறன் பாதிக்கப்பட்ட 100 முதியோருக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார். இதன்பின்னர் ஜி.கே.எம்.குடியிருப்பு பகுதியில் 4.36 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ஜென்ரல் குமரமங்கலம் குளத்தினையும் அதனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதன்பிறகு கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கொளத்தூர் தொகுதியை சேர்ந்த மாணவ - மாணவிகள் 10, 12ம் வகுப்பு பொது தேர்வில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த 381 பேரை பாராட்டும் வகையில் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்களை வழங்கினார். இதையடுத்து பெரியார் நகர் 4வது தெருவில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார். மாதவரம் குமரன் நகர் 80 அடி சாலை பகுதியில் 91.36 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட தணிகாசலம் நகர் கால்வாயை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கே.என்.நேரு, கலாநிதி வீராசாமி எம்பி, மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன், மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், சுதர்சனம், பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி நாகராஜன், மண்டல குழு தலைவர்கள் சரிதா, தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், நந்தகோபால், பகுதி செயலாளர்கள் துக்காராமன், புழல் நாராயணன், வை.மா. அருள்தாசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.