Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Monday, August 11 2025 Epaper LogoEpaper Facebook
Monday, August 11, 2025
search-icon-img
Advertisement

தொடர் தோல்வியால் டெபாசிட் கிடைக்குமா என அச்சம் திமுக போட்டியால் பதுங்கியதா அதிமுக? பரபரப்பு தகவல்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், முதல் நாளில் 3 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இத்தொகுதியின் முதல் எம்எல்ஏவாக வி.சி.சந்திரகுமாரை திமுக வேட்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து அதிமுகவும், அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அடுத்தடுத்து அறிவித்தன. இதற்கு காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நேரடியாக திமுகவே களமிறங்கியதும், அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச்செயலாளரான வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் மற்ற கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்தே, நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்துக்கு பின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக அறிவித்துள்ளது.

கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 44.27 சதவீத வாக்குகளையும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் யுவராஜா 38.41 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். கடந்த 2023ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 64.58 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு 23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.

கடந்த 2021ல் நடைபெற்ற தேர்தலை விட 2023 இடைத்தேர்தலில் திமுக கூட்டணி 20 சதவீதத்திற்கும் மேல் கூடுதலாக வாக்குகளை பெற்றிருந்தது. அதாவது 2023 இடைத்தேர்தலில் பாஜ, அதிமுக ஓபிஎஸ் அணி ஆகியவை அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இதனால் 23 சதவீதத்தை அதிமுக பெற முடிந்தது. ஆனால், இந்த தேர்தலில் பாஜ, அதிமுக இடையே பூசல்கள் இருப்பதால் ஆதரவு அளிக்க வாய்ப்பு இல்லை. எனவே, கடந்த தேர்தலை விட இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் மேலும் குறையும்.

அதோடு கடந்த முறை கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டது, ஆனால் இந்த முறை திமுகவே நேரடியாக களம் காணுகின்றது.  மேலும், திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஏற்கனவே இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் என்பதோடு தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். இது தவிர, தமிழக அரசின் 4 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் பயனடைந்தவர்கள், சிறுபான்மையினர் வாக்குகள் என அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக உள்ளதால் இந்த முறை அதிமுக போட்டியிட்டால் டெபாசிட் கிடைப்பதே கேள்விக்குறியாகிவிடும் நிலை உள்ளது.

ஒரு வேளை டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டால் இதன் பாதிப்பு அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இல்லையெனில், கூடுதல் தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுக்கும். குறிப்பாக, பாஜ கூட்டணியில் சேருவதற்கு கடும் நிபந்தனைகளை விதிக்கும் என்பதோடு மேற்கு மண்டலத்தில் கூடுதல் தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுக்கும்.

ஏற்கனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் மீண்டும் தோல்வி நிச்சயம் ஏற்படும் என்பதை உணர்ந்து இந்த இடைத்தேர்தலையும் போட்டியிடாமல் பின்வாங்கி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். அதே வேளையில் இந்த புறக்கணிப்பது என்பது எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பேற்ற பிறகு தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமே தவிர கட்சிக்கு எந்த வகையிலும் பலன் தராது என்பதோடு கட்சியை கடுமையாக பாதிக்க செய்யும் என்றும், குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிமுக வாக்கு பலம் கொண்ட கட்சி என்ற பிம்பம், தேர்தல் புறக்கணிப்பு மூலம் உடைந்து விட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதேநேரம் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது அக்கட்சி தொண்டர்களை கவலை அடைய செய்துள்ளது. இதன்மூலம் அதிமுகவின் எதிர்காலம் தமிழகத்தில் வரும் காலங்களில் கேள்விக்குறியாகி விடும் என்றே அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர். இதேபோல் தற்போதைய கூட்டணி கட்சியான தேமுதிக கடந்த முறை தனித்து போட்டியிட்டு 1,432 வாக்குகள் மட்டுமே பெற்றது. இந்த முறை கூட்டணி கட்சியான அதிமுக புறக்கணித்ததால், தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.

* பாஜ போட்டியா? புறக்கணிப்பா?

அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், பாஜ போட்டியிடுமா? புறக்கணிக்குமா? என்பது தெரியவில்லை. ஏன் என்றால் கடந்த முறை அதிமுக 23 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது. அப்போது கூட்டணியில் இருந்து பாஜ, ஓபிஎஸ் அணி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தது. தற்போது பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி உள்ளது. அதேபோல், கூட்டணியில் இருக்கும் பாமகவில் பேரனுக்கு இளைஞரணி தலைவர் பதவி கொடுத்ததால் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதனால், தேர்தலில் பாஜவுக்கு பாமக ஆதரவு அளிக்குமா என்பது கேள்விக்குறிதான். இந்த சூழலில் பாஜ தனித்து போட்டியிட்டால் டெபாசிட் வாங்குவது சந்தேகம். இதனால் இந்த தேர்தலை புறக்கணிப்பது குறித்து பாஜ தலைவர்கள் மேலிடத்திடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒருவேளை பாஜவும் புறக்கணித்தால், நாம் தமிழர் கட்சி மட்டும்தான் எதிர்க்கட்சி வரிசையில் போட்டியிடும் சூழல் உருவாகி உள்ளது.

* 11 தேர்தலில் தோல்வி விவரம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த 11 தேர்தல்களில் தொடர் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

* ஆண்டு தேர்தல்

2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

2019 நாடாளுமன்ற தேர்தல்

2019 22 சட்டமன்ற தொகுதி

* இடைத்தேர்தல்

2020 ஊரக உள்ளாட்சி தேர்தல்

2020 கன்னியாகுமரி நாடாளுமன்ற

* இடைத்தேர்தல்

2021 சட்டமன்ற பொதுத்தேர்தல்

2021 9 மாவட்ட ஊரக

* உள்ளாட்சி தேர்தல்

2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

2023 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல்