புதுடெல்லி: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசு வேலைகளை நிரப்பியதாக புகார்கள் எழுந்தது இது தொடர்பாக அமலாக்கத்துறை அவருக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தவுடன் அவரை கைது செய்து இருந்தது. பிறகு அவர் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி இருந்தது. இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மாலியா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் , கடந்த ஒன்றரை வருடங்களாக வாரம் தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வருகிறார் ஆனால் வழக்கில் பெரிய முன்னேற்றம் எதுவும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை பிறகு அவரை ஏன் வாரம் இருமுறை நேரில் அழைக்கிறீர்கள் அவரும் உங்கள் அலுவலகத்திற்கு வருகிறார் தேநீர் குடிக்கிறார் பிறகு சென்று விடுகிறார் இது செந்தில் பாலாஜி மட்டுமில்லாமல் வாரம் இரண்டு நாட்கள் அவருக்காக காத்திருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட தண்டனையாக தான் நாங்கள் பார்க்கிறோம், வரும் வாரம் செந்தில் பாலாஜி இந்த வழக்கிற்காக உங்கள் அலுவலகத்திற்கு வந்தால் அவரிடம் என்ன விசாரணை நடத்துவீர்கள் என சொல்லுங்கள் என கேட்டனர். இதைத்தொடர்ந்து அதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், செந்தில் பாலாஜி அதிகாரம் மிக்க நபர் என்பதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது என்று தெரிவித்தார்.
இதையடுத்து அமலாக்கத்துறை வாதங்களுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் ரான் சங்கர், ‘‘இந்த விவகாரத்தில் தன்னை வேண்டுமென்றே அலைகழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அமலாக்கத்துறை இவ்வாறு செய்கிறார்கள். வழக்கில் இன்னும் நீதிமன்ற விசாரணை கூட தொடங்கவில்லை என்றனர். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ வாரம் இருமுறை அமலாக்கத்துறையிடம் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்பது துன்புறுத்தலுக்கு சமம். இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி இடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் மட்டுமே அமலாக்கத்துறை அவரை நேரில் அழைக்க வேண்டும். நேரில் ஆஜர் ஆவதிலிருந்து ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடலாம்’’ என்றனர்.


