செல்லூர் ராஜூ நடிகர்களை கூட்டணிக்கு அழைப்பது எடப்பாடி மீதான நம்பிக்கையை அதிமுகவினர் இழந்ததையே காட்டுகிறது: அண்ணாமலை கிண்டல்
சென்னை: நடிகர்களை கூட்டணிக்கு செல்லூர் ராஜூ அழைக்கிறார். இதைப் பார்க்கும்போது அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை அக் கட்சியினர் இழந்து விட்டதாகத் தான் தோன்றுகிறது என அண்ணாமலை கிண்டலடித்துள்ளார். தமிழக பாஜ மையக்குழு கூட்டம் தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் சுமார் 6 மணி நேரம் வரை நீடித்தது. கூட்டத்தில், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் பொன்.பாலகணபதி உட்பட மையக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடர்ந்து, அண்ணா மலை நிருபர்களிடம் கூறியதாவது: ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தனிநபர் அறிக்கை ஒன்றை தமிழக அரசிடம் சமர்பித்துள்ளார். அந்த அறிக்கையில் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்கள் அதிகம் உள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், எங்களுக்கு உடன்பாடு கிடையாது. கயிறு, திருநீறு வைக்க கூடாது என்கிறார்கள். பல ஆசிரியர்கள் சிலுவை அணிந்து வருவார்கள், ஹிஜாப் அணிவார்கள். இந்த அறிக்கையால் பள்ளிகளில் பன்முகத்தன்மை பாதிக்கப்படும். இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘நடிகர் விஜய் அதிமுக உடன் கூட்டணி வைத்தால் நல்லது’ என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறுவதை பார்த்தால், அக்கட்சியின் தலைவர் மீதான நம்பிக்கையை அவர்கள் இழந்ததாக பார்க்க முடிகிறது. அதிமுக பனிப்பாறை போன்று கண்முன்பே தேய்ந்து வருகிறது. தேர்தலில், அதிமுக 0.86 சதவீதம் அதிகம் வாக்குகள் பெற்றதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், 2019 நாடாளுமன்ற தேர்தலில் 23 இடங்களில் போட்டியிட்டார்கள். தற்போது அதை விட 9 தொகுதிகளில் கூடுதலாக போட்டியிட்டனர். இது எப்படி சரியாகும். அதிமுகவை வளர்க்கும் வேலையை அவர்கள் பார்க்க வேண்டும். பாஜ குறித்து பேச வேண்டாம். அவதூறு கருத்துகள் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் எவ்வித புகாரும் தெரிவிக்கவில்லை. ஆனால், நானே சில புகார்கள் குறித்து பலரிடம் கருத்துகளை கேட்டுள்ளேன். விரைவில் அதன் மீதான நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.