Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

போடி அருகே முந்தல் வனப்பகுதியில் தடையை மீறி மாடு மேய்த்த சீமான்: தடுத்ததால் வனத்துறையினர்-நாதகவினர் தள்ளுமுள்ளு

போடி: தேனி மாவட்டம் போடியில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக வனப்பகுதிகளில் மலை மாடுகள் மேய்க்கும் போராட்டம் நடத்தப்போவதாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று அவரது தலைமையில், போடி அடகுபாறை பகுதியில் மலைமாடுகள் மேய்க்கும் போராட்டம் நடைபெற்றது.

இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுமாடுகள் மற்றும் மலைமாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. போடி அருகே முந்தல் பகுதியில் நேற்று காலை நடந்த கூட்டத்தில் சீமான் பேசுகையில், ‘‘கடந்த 2006ம் ஆண்டு வனங்களில் மாடுகள் மேய்க்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேய்ச்சலுக்கு அனுமதி இல்லாமல் போனதால் சுமார் 1.5 லட்சம் மலைமாடுகள் இருந்தநிலையில், தற்போது 50 முதல் 60 ஆயிரமாக குறைந்து விட்டது. இந்த நிலை நீடித்தால் மாட்டினங்கள் அழிந்து விடும். விவசாயமும் சேர்ந்து அழிந்து முற்றிலும் வறண்ட பகுதியாக மாறிவிடும்’’ என்றார்.

இதனைத்தொடர்ந்து சீமான் தலைமையில், போடி முந்தல் பகுதியில் இருந்து குரங்கணி மலைச்சாலைக்கு சுமார் 1,500க்கும் மேற்பட்ட மலைமாடுகளுடன், அக்கட்சியினர் நடந்து சென்றனர். அப்போது அடகுபாறையில், வனப்பகுதிக்குள் நுழைய விடாமல் வனத்துறையினர் தடுப்புகளை வைத்து தடை ஏற்படுத்தியிருந்தனர்.

சீமானுடன் சென்றவர்கள், தடுப்புகளை கீழே தள்ளி விட்டு, தடையை மீறிச் செல்ல முயன்றனர். அப்போது சீமான் மற்றும் வனத்துறையினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் வனத்துறையினரின் தடையை மீறி வனப்பகுதிக்குள் மாடுகளுடன் அவர்கள் நுழைந்தனர். சுமார் ஒரு மணி நேரம், மலைமாடுகளை அப்பகுதியில் மேயவிட்டனர். அதன் பின்னர் சீமான் உள்ளிட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், வனத்துறையினர் அளித்த புகாரின்பேரில் சீமான் மற்றும் 100க்கு மேற்பட்டோர் மீது குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.