திருமயம்: பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியது பற்றி கருத்து சொல்ல முடியாது. சீமான் அம்பியாக இருப்பார்... திடீரென அந்நியனாக மாறுவார்.... என்று பிரேமலதா கடுமையாக தாக்கியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர்அலி குவாரி உரிமையாளர்களால் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருமயம் தாசில்தார் அலுவலகம் அருகே நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெரியார் குறித்து சீமான் சர்ச்சையாக பேசியது பற்றி கருத்து சொல்ல முடியாது. இதுபற்றி அவர் கிட்ட போய் தான் கேட்கனும். சீமான் அம்பியாகவும் இருப்பார்...திடீரென்று அந்நியனாகவும் மாறுவார்... அதனால் அவரை கணக்கில் எடுத்து கொள்ள கூடாது என்று ஏற்கனவே நான் கூறியுள்ளேன். இறந்து போன தலைவர்களை பற்றி நாம் யாரும் பேசக்கூடாது. அவர்கள் வாழ்ந்து சரித்திரம் படைத்து விட்டு சென்று விட்டனர்.
இருக்கிறவர்களை பற்றியும், இருக்கும் அரசியல் பற்றியும் பேசுவதை விட்டுவிட்டு இறந்தவர்களை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று நான் பலமுறை கண்டித்துள்ளேன். அதில் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது. விஜய் வெளியே வரவேண்டும், அவர் மக்களுக்கு செய்ய வேண்டிய நிறைய பணிகள் உள்ளது. மாட்டின் கோமியம் குறித்து பெரிய விவாதம் நடந்தது. என் கருத்தை பொறுத்த வரையில் கோமியம் என்பது இந்துக்களால் புனிதமாக பார்க்கக்கூடிய ஒன்று. இது அனைவருக்கும் தெரியும். உங்களுக்கு பிரியப்பட்டால் நீங்கள் அதனை குடியுங்கள் இல்லையென்றால் குடிக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.


