பயிர் சாகுபடிக்கு விதைத்தேர்வு மிக முக்கியமான அம்சம். நாம் எந்த ஒரு பயிரை சாகுபடி செய்தாலும் விதையின் தன்மையை அறிந்து பயிர் செய்தால் நிச்சயம் அதிக மகசூல் பெறலாம். விதைகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும்? அவை எந்த பதத்தில் இருந்தால் விதைப்புக்கு தோதாக இருக்கும்? என்ற கேள்வியோடு திருநெல்வேலி விதை பரிசோதனை ஆய்வகத்தின் வேளாண்மை அலுவலர் மகேஸ்வரனைச் சந்தித்தோம்.விதைப்பதற்காக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு விதையும் மகசூல் பெருக்கத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். விதைக்கப் பயன்படுத்தப்படும் பயிர் ரகங்களில் பிற ரக விதைகள் கலவாது இருக்க வேண்டும். ஏனெனில் ரகத்திற்கு ரகம் பயிரின் வளர்ப்புக் காலம் மாறுபடுவதால், பிற ரக விதைகள் கலந்து இருந்தால் ஒன்றாக கிளை விட்டு வளர்ந்து, பூத்து, காய்த்து ஒன்றாக அறுவடைக்கு வராமல் போய்விடும். அந்தந்தப் பயிர் ரகங்களுக்கு இட வேண்டிய இடுபொருட்களின் தேவை, ஒவ்வொரு ரகத்திற்கு ஏற்ப மாறுபடுவதால் பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போவதோடு, வீணாக பிற ரகங்களுக்கு சத்துக்கள் இடப்பட்டு சாகுபடி செலவும் வீணாகும். நெற்பயிர் சாகுபடி செய்வதாக இருந்தால், ஆதார விதையாக வாங்கி விதைக்கும்போது 2000 நெல்மணிக்கு பிற ரக நெல்மணி ஒன்றுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சான்றளிக்கப்பட்ட விதையாக வாங்கி விதைத்தால் 1000 நெல்மணிக்கு பிற ரக நெல்மணிகள் இரண்டுக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்மூலம் விவசாயிகளின் உழைப்பு மற்றும் இடுபொருட்களான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு வீணாகாது.
விதையின் புறத்தூய்மையும் மிக முக்கியமானது. விதை வாங்கும்போது விதையின் புறத்தூய்மையைப் பார்த்து கவனமுடன் வாங்க வேண்டும். நாம் விதைக்கும் விதைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விதையின் பயிர்க்கழிவுகள், முழுவதுமாக விளையாத விதைகள், மண்துகள்கள், களை விதைகள் மற்றும் பிற பயிர்களின் விதைகள் கலந்து இருக்க வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு புறத்தூய்மை குறைந்த விதைகளை விலை கொடுத்து வாங்கி விதைத்தால், வாங்கப்பட்ட விதையின் மொத்த எடையில் மேற்கூறிய பொருட்கள் கலந்து இருந்தால் நல்ல விதைகளாக இருப்பவை மட்டுமே முளைக்கும். இதனாலும் வயலில் பயிர் எண்ணிக்கை குறைந்து மகசூல் இழப்பு ஏற்படும். விதையின் புறத்தூய்மை பயிர்களுக்கு ஏற்ப 95 சதவீதம் முதல் 98 சதவீதம் சுத்தமாக இருக்க வேண்டும். அதாவது 100 கிராம் விதையை கையில் எடுத்து பார்த்தால் 95 முதல் 98 கிராம் அளவில் விதை சுத்தமாக இருக்க வேண்டும். அடுத்ததாக விதையின் ஈரப்பதம் சரியான அளவில் இருத்தல் அவசியம். விதைகளில் ஈரப்பதம் அதிகம் இருந்தாலும், குறைவாக இருந்தாலும் விதையின் முளைப்புத்திறன் பாதிக்கும். விதைகளில் இருக்க வேண்டிய ஈரப்பதம் பயிருக்குப் பயிர் வேறுபடும். நெல் விதையில் 13 சதவீதமும், சோளம், மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட சிறுதானிய பயிர்களுக்கு 12 சதவீதமும், பயறு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு 9 சதவீதமும், கத்தரி, மிளகாய், தக்காளி பயிர்களுக்கு 8 சதவீதமும், கொடிவகைப் பயிர்களுக்கு 7 சதவீதமும் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
இந்த அளவை விட ஈரப்பதம் அதிகரித்தால் விதைகளை பூஞ்சணமும் பூச்சிகளும் தாக்கும். அதனால் விதையின் முளைப்புத்திறன் பாதிக்கும்.ஒவ்வொரு பயிருக்கும் இந்திய அரசால் குறைந்தபட்ச முளைப்புத்திறன் எவ்வளவு இருக்கவேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மக்காச்சோளத்திற்கு 90 சதவீதமும், நெல், எள், கொள்ளு மற்றும் சணப்பு ஆகிய பயிர்களுக்கு 80 சதவீதமும், சோளம், கம்பு உள்ளிட்ட சிறுதானியப்பயிர்கள், பயறு வகைப் பயிர்கள், உயர் ரக பருத்தி, தக்கைப்பூண்டு மற்றும் அகத்திக்கு 75 சதவீதமும், நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு, தக்காளி, கத்தரி மற்றும் வெங்காயத்திற்கு 70 சதவீதமும், நாட்டு ரக பருத்தி, வெண்டை மற்றும் கொத்தமல்லிக்கு 65 சதவீதமும், கொடி வகை பயிர்களுக்கு 60 சதவீதமும் முளைப்புத்திறன் இருக்க வேண்டும். அந்த அளவில் முளைப்புத்திறன் கொண்ட விதைகளே விதைகளாக விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகின்றன. எனவே விதைத் தேர்வின்போது விவசாயிகள் மிகுந்த கவனம் செலுத்தி மேற்குறிப்பிட்ட விதைகளின் தர நிர்ணயங்களை சரிபார்த்து விதைகளை வாங்கி விதைத்து உயர் மகசூல் பெறலாம் என பல பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்