Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி எப்படி விநியோகமாகும்? ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கும் திட்டம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. ரேஷன் கடைகள், பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழும் இந்த அரிசி வழங்கப்பட உள்ளது. உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி கடலூர் மாவட்டம், முருகன்குடியைச் சேர்ந்த கனிமொழி மணிமாறன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், செறிவூட்டப்பட்ட உணவு ஒழுங்குமுறை சட்டப்படி, தலசீமியா, ரத்தசோகை உள்ளவர்கள் இரும்புச் சத்து கொண்ட செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ணும் போது, பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோல, தலசீமியா, அனீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என அரிசி பையில், எச்சரிக்கை வாசகம் இடம்பெறாமல் விநியோகிக்கப்படுவதாக கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அனைத்து ரேஷன் கடைகளின் முன்பும், தலசீமியா, அனீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தான் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என்று விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளதால், பைகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறச் செய்யத் தேவையில்லை என்றார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், எந்த அறிவியல் ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த திட்டம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும். இந்த அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்காணிக்கப் போகிறீர்கள். இது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.