Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகம்: அமைச்சர் உத்தரவு

சென்னை: பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை செய்துவருகிறது.

அதன் தொடர்ச்சியாக, பள்ளிகள் திறக்கப்படும் போது துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். அதுதொடர்பாக அவர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ள அறிவுரைகளில், கிராமப்புறங்களில் இருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவியருக்கு பேருந்து வசதிகள் உள்ளனவா என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள் பள்ளிக் கூடங்களுக்கு வரும் வகையில் பேருந்து சேவை தேவைப்பட்டால் அவற்றை கண்காணித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி பேருந்து சேவையை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அன்றைய நாளில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப் பைகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். மேலும், அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகப் பொருட்கள் வந்துள்ளதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.