Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வகுப்பறையிலேயே போதையில் இருந்த மாணவன்; பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 3 பேர் கைது

* பழவந்தாங்கலில் பரபரப்பு

* தம்பதி உள்பட 4 பேர் சிக்கினர்

ஆலந்தூர்: பழவந்தாங்கலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். வகுப்பறையிலேயே மாணவன் போதையில் மயங்கி இருந்தது தெரிய வந்தது. பழவந்தாங்கலில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் பிளஸ் 2 மாணவன் வகுப்பறையில் போதையில் தள்ளாடியபடி இருப்பதாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற அவர், மாணவனை நெருங்கியபோது அவன் கஞ்சா புகைத்திருப்பது தெரிந்தது. தொடர்ந்து அவனது சட்டை பாக்கெட்டில் இருந்த கஞ்சா பொட்டலத்தை வெளியே எடுத்த தலைமை ஆசிரியர், பழவந்தாங்கல் போலீசாரையும், மாணவனின் பெற்றோரையும் வரவழைத்தார். பின்னர் டிசியுடன் மாணவனை அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் கூறினார்.

அப்போது, இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாக அவனது பெற்றோர் கெஞ்சியதையடுத்து தலைமை ஆசிரியர் மாணவனை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இதனையடுத்து போலீசார் அந்த மாணவனிடம் கஞ்சாவை எங்கே வாங்கினாய் என்று கேட்டபோது பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் வாங்கியதாக கூறினான். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் சந்தேகப்படும்படி திரிந்த ஒரு நபரை பிடித்து சோதனை செய்தபோது, அவன் கஞ்சா போட்டாலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அந்த நபர் பழவந்தாங்கலை சேர்ந்த தில்ஷன் (24) என்பதும், இவன் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வைஷாக் (23), லோக பிரவீன் (24) ஆகியோரிடம் சேர்ந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி பள்ளி, கல்லூரிகளில் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் வாட்ஸ்அப் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வியாசர்பாடி பொறுப்பு இன்ஸ்பெக்டர் கிருபாநிதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் மதியம் வியாசர்பாடி போலீசார் அம்பேத்கர் கல்லூரி சாலை பகுதியில் வைத்து ஒருவரை மடக்கிப் பிடித்தனர். அவரது கைப்பையை சோதனை செய்தபோது அதில் அரை கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் ஓட்டேரி பொடிக்கடை பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (32) என்பது தெரிய வந்தது. இவர் திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் என்ற டாட்டூ நவீன் மூலம் கஞ்சாவை வாங்கி வந்ததும், இருவரும் வாட்ஸ்அப் மூலம் கஞ்சா கேட்பவர்களுக்கு அவர்களது இடத்தில் கொண்டு போய் சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நவீன் குமாரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல், நேற்று புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியில் வியாசர்பாடி பி.வி காலனி 8வது தெருவைச் சேர்ந்த சரவணன் (31) என்பவர் ஆந்திரா சென்று கஞ்சா வாங்கி வந்து மணலியில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து விற்று வந்ததுள்ளார். இதில் அவரது மனைவி ஐஸ்வர்யா எனற அலமேலு என்பவர் புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த அபினேஷ் என்பவரிடம் கஞ்சாவை விற்கச் சொல்லி கொடுத்துள்ளார். இதில் அபினேஷ் வீட்டில் ₹25 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அபினேஷ் (30) மற்றும் சரவணனின் மனைவி ஐஸ்வர்யா (25) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சம்பள பணத்தில் கஞ்சா வியாபாரம்

சேலையூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், கூலி தொழிலாளிகளை குறிவைத்து சிலர் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சேலையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அகரம்தென் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற வடமாநில வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் 2 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், பீகாரை சேர்ந்த ஷாமீம் அஹ்மத் (21), மொஹமத் இண்டியாஸ் (28) எனவும், தாம்பரத்தில் உள்ள கடைகளில் வேலை செய்து, அதில் வரும் பணத்தில் சொந்த ஊருக்கு சென்று கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, இப்பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நேற்று தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.