செய்யூர்: சூனாம்பேடு அரசு நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, சூனாம்பேடு காவல்துறை ஆய்வாளரின் சொந்த செலவில் இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் கல்வி திறன் மேம்படவும் மற்றும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிடவும் சூனாம்பேடு காவல்துறை ஆய்வாளர் அமிர்தலிங்கம் தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி மாணவர்களை ஊக்குவித்தார். இந்நிகழ்ச்சியில், சூனாம்பேடு போலீசார், பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் பள்ளி தலைமை ஆசிரியர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.