சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு தேர்வுகளும் அதேபோல மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடந்தன. இதற்கான தேர்வு அட்டவணைகளை முன்கூட்டியே கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
இதுகுறித்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் அமைச்சர் வெளியிட்டுள்ளதாவது: நடப்பு 2025-26ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக் கல்வித்துறையின் நாள்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிகளின் பணி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகள் நடத்த வேண்டிய தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மேலும், கடந்த ஆண்டு போலவே 2025-26ம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணைகள் குறித்த விவரங்கள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.