Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பணிமாறுதலில் செல்லும் தலைமை ஆசிரியருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்த பள்ளி மாணவிகள்

வேதாரண்யம் : ஆயக்காரன்புலத்தில் ஒரு பள்ளியில் இருந்து மாறுதலாகி செல்லும் தலைமை ஆசிரியருக்கு மாணவிகள் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்... என்பார்கள்.

அப்படி வாழ்வது தான் சிறப்பு என்கிறார்கள் பெரியவர்கள். அப்படி தன் அன்பால் மாணவர்களை கட்டிப்போட்ட ஆசிரியை ஒருவர் பணியிட மாறுதல் பெற்று செல்லும் போது ஒரு பள்ளியே அழுதிருக்கிறது. ஆசிரிய பணி அறப்பணி.

மற்ற வேலைகளைப்போல் அல்லாமல் அடுத்த தலைமுைைறையை உருவாக்கும் உன்னத பணி. அதனால் தான் தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். அந்த வகையில் ஆசிரியப்பணி எவ்வளவு உன்னதமானது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் மூன்றாம்சேத்தி ஊராட்சியில் உள்ளது அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சுமார் 1,300 மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

இந்த பள்ளிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டெல்லா ஜேனட் என்ற தலைமையாசிரியர் புதிதாக பொறுப்பேற்றார். மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக திகழும் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ஸ்ெடல்லா ஜேனட் பொறுப்பேற்ற பிறகு அந்த பள்ளி மேலும் சிறந்ததாக திகழ்ந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீட்டு முறையில் இந்த பள்ளியில் படித்த 10க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். ஸ்டெல்லா ஜெனட் தலைமை ஆசிரியராக பணி மாறுதலில் இங்கு வந்த பிறகுதான் பள்ளி வளாகம் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் திகழ்ந்து வருகிறது எனக் கூறப்படுகிறது.

இவரின் திறமையான மற்றும் அர்ப்பணிப்பான ஆசிரிய பணியை பாராட்டும்விதமாக தமிழக அரசு இவருக்கு கடந்த 2023-24ஆம் ஆண்டிற்கான சிறந்த தலைமை பண்பிற்கான அண்ணா விருதும், 10லட்சம் ரூபாய் பரிசும் வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜேனட் பணி மாறுதல் செய்யப்பட்டு நகர்கோவிலில் உள்ள பள்ளிக்கு செல்கிறார்.

இதையடுத்து, ஸ்டெல்லா ஜேனட் அண்ணா விருது பெற்றதற்காக பாராட்டு விழாவும், பிரிவு உபச்சார விழாவும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், கிராம பொதுமக்கள் தலைமையாசிரியருக்கு சால்வை அணிவித்தும், நினைவுப்பரிசும் கொடுத்து பாராட்டினர்.

அந்த கூட்டத்தில் இருந்து ஆசிரியர் ஸ்டெல்லா ஜேனட் விடை பெற முயன்றபோது, பள்ளி மாணவிகள் ஆசிரியையை கட்டி பிடித்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மாணவிகளின் கண்ணீரைத் துடைத்த தலைமையாசிரியர் ஸ்டெல்லா ஜெனட்டும் தேம்பித் தேம்பி அழுது மாணவிகளின் கண்ணீரைத் துடைத்தபடி அழக்கூடாது என தேற்றினார்.

அப்போது ஸ்டெல்லா ஜேனட்டின் காலில் விழுந்து மாணவிகள் ஆசி பெற்றனர். பணியிட மாறுதலில் செல்லும் தலைமை ஆசிரியரை பிரிய முடியாமல் கண்ணீர் விட்டு அழும் அளவிற்கு மாணவிகள் நெஞ்சில் அந்த ஆசிரியை இடம்பிடித்துள்ளார். ஆசிரியர் மாறுதல் செல்லுதலை அறிந்த மாணவிகள் கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.