சென்னை: மறைந்த நடிகை சரோஜா தேவிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். எம்ஜிஆருடன் சரோஜா தேவி இணைந்து நடித்த திரைப்படங்கள் யாவும் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. ‘சரோஜா தேவி’ எனும் பெயர், அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "பழம்பெரும் திரைப்பட நடிகை, "அபிநய சரஸ்வதி" என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி.
புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன், சரோஜா தேவி இணைந்து நடித்த திரைப் படங்கள் யாவும் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. "சரோஜா தேவி" எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும்.
சரோஜா தேவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.


