Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜவில் ஐக்கியமான சரத்குமார்: தோல்வியை தழுவிய ராதிகா

சென்னை: பாஜவுடன் கட்சியை இணைத்ததால் சரத்குமார் மீது நிலவிய அதிருப்தி காரணமாக, விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட அவரது மனைவி ராதிகா சரத்குமார் தோல்வியை தழுவியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த கட்சியின் தலைவர் சரத்குமார், பாஜ கூட்டணியில் இணைந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தனது கட்சியை கடந்த மார்ச் 12ம் தேதி திடீரென பாஜவோடு இணைத்துக் கொண்டார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவுடன் சரத்குமார் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது கட்சியை கலைத்து, பாஜவுடன் இணைத்தது அக்கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜவில் விருதுநகர் தொகுதியானது சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி, அவர் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜ வேட்பாளராக போட்டியிட்டார்.

இந்த தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரும் போட்டியிட்டனர். இதனால் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது.  இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இருவரும் மாறி மாறி முன்னிலைக்கு வந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் ராதிகா மற்ற வேட்பாளர்களுக்கு கடுமையாக போட்டி ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அவரால் முன்னிலை பெற முடியவில்லை. 3வது இடத்திலேயே தொடர்ந்து இருந்தார்.

இவரது வெற்றிக்காக சரத்குமார் கோயிலில் அங்கப்பிரதசட்னம் செய்த வீடியோ வைரலானது. ஆனாலும் தேர்தலில் தோல்வியை தழுவியது சரத்குமார் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடம் நன்கு பிரபலமான ராதிகாவை விட, விஜயகாந்த மகன் கடும் போட்டி ஏற்படுத்தினார். ஆனால் ராதிகாவால் போட்டியை ஏற்படுத்த முடியவில்லை. பாஜவுடன் கட்சியை சரத்குமார் இணைத்ததால் ஏற்பட்ட அதிருப்தியே ராதிகா தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.