சந்தேஷ்காலி போராட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு பாஜ பணம் கொடுத்தது அம்பலம்: கட்சி பிரமுகர் பேசும் வீடியோ வெளியானதால் பரபரப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலி பகுதி திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக் என்பவரை ரேஷன் விநியோக ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஷாஜகானும், அவரது ஆதரவாளர்களும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சந்தேஷ்காலியில் போராட்டம் நடத்திய பெண்களுக்கு பாஜவினர் தலா ரூ.2000 கொடுத்து அழைத்து வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
சந்தேஷ்காலி வட்டார பாஜ தலைவர் கங்காதர் கயல் என்பவர் பேசும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற 70 பெண்களுக்கு தலா ரூ.2000 கொடுத்துள்ளதாக கங்காதர் பேசுவதை கேட்க முடிகிறது.அதில் பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது என்றும் மாநில சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியின் வற்புறுத்தலின் பேரில் இவ்வாறு கூறுவதற்கு பெண்கள் நிர்பந்தப்படுத்தப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார். ஆனால்,அந்த வீடியோக்கள் போலி என்று பாஜ கூறியுள்ளது. திரிணாமுல் செய்தி தொடர்பாளர் ரிஜூ தத்தா,‘‘ சந்தேஷ்காலி விவகாரத்தில் பாஜவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலி என்பது அம்பலமாகியுள்ளது’’ என்றார்.