சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்கு பதிய தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எந்த ஒரு வழக்கையும் பதிவு செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம் தொடர்பாக மஹாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவானது தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர், இந்த விவகாரம் தொடர்பான வழக்கை ஒருவேளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய முடியவில்லை என்றால், கர்நாடகாவுக்கு மாற்ற வேண்டும். குறிப்பாக மிக மோசமான முறையில் விமர்சனம் செய்திருந்த நுபுர் சர்மா, அர்னாப் கோஸ்வாமி ஆகியோர்களின் வழக்குகள் மாற்றம் செய்யப்பட்டது. இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்றனர். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘சனாதனம் தொடர்பான விவகாரத்தில் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார். குறிப்பட்ட ஒரு சமூகத்தை கொரோனா மற்றும் கொசுக்களை போல அழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்’’ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போது கூடுதலாக ஒன்றும் கூறப்போவது கிடையாது. மேலும் தகுதியின் அடிப்படையிலும் தற்போது விசாரணை செய்யவில்லை. இருப்பினும் இந்த விவகாரத்தில் உதயநிதி தொடர்ந்த வழக்கிற்கு எதிர்மனுதாரர்கள் அனைவரும் இன்றைய தினத்தில் இருந்து அடுத்த ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. இதையடுத்து அதற்கு அடுத்த 15 நாட்களில் வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் சனாதனம் தொடர்பான விவகாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக இனிமேல் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை ஏப்ரல் மாதம் இறுதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரையில் இந்த விவகாரத்தில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடரும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.