‘‘மாங்கனியில் தந்தை, மகன் ேமாதலுக்கு காரணமான தீயசக்தியை வெல்ல ‘வேல்’ வழிபாடு நடத்தினாராமே மருமகள் தெரியுமா..’’ என கேட்டவாறே வந்தார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி கட்சியில் தந்தை, மகன் மோதல் மேலும் மேலும் பூதாகரமாகி வருகிறதாம்.. மகனைவிட மருமகள் மீதான கோபமே இதற்கு முக்கிய காரணமாம்.. குடும்பத்தை கடந்து கட்சியிலும் மருமகளின் ஆதிக்கம் அதிகமாகவே நிறுவனருக்கு பயம் வந்துட்டாம்.. இதனாலேயே பிடியை கடுமையாக இறுக்கி உள்ளதாக கிசுகிசு பரவுகிறதாம்.. பதவிகளில் ஆளுமை, தேர்தலில் போட்டி, கூட்டணி தலையீடு போன்ற தன்னிச்சையான மருமகளின் செயல்களால் ஷாக் அடித்து விழிபிதுங்கி நின்ற நிறுவனர் சரியான நேரத்துக்காக காத்திருந்தாராம்.. தனது மகளின் வாரிசான, பேரனை அரசியல் களத்தில் இறக்க, பப்ளிக்காக பிரச்னை வெடிக்கவே அனைத்தையும் தனக்கு சாதமாக்கி மருமகளை அகற்றி ஒவ்வொன்றிலும் வெற்றிகண்டு வருகிறாராம் தந்தை.. நிலைமை இப்படியிருக்க மயிலம் கோயிலுக்கு ஏற்கனவே விசிட் அடித்த மருமகளோ மீண்டும் இளைய மகளுடன் சென்று தீயசக்தியை வெல்வதற்கான வெள்ளி ‘வேல்’ வழிபாடு செய்தாராம்.. யார் அந்த தீயசக்தி என்ற சலசலப்புதான் தற்போது மாங்கனி கட்சியில் நிலவுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரர் சுற்றுப்பயணத்திற்கு குறிப்பிட்ட மாவட்டத்தில் நாளுக்குநாள் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். அவரது வருகைக்கு இப்போதே எதிர்ப்புக்குரல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெளிப்படையாக எழுந்திருப்பது அந்தக்கட்சியினரை டென்ஷனாக்கி இருக்கிறதாம்.. குறிப்பிட்ட சமுதாயத்தின் சார்பில் சேலத்துக்காரருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டு இருக்காம்.. ‘ஆட்சியில் இருந்தபோதும் சரி... இல்லாதபோதும் சரி... தென்மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினரை தொடர்ந்து சேலத்துக்காரர் புறக்கணித்து வருகிறாராம்.. இதனால் தென்மாவட்டங்களின் பெரும்பாலான மாவட்டங்களில் இலைக்கட்சியின் வாக்கு வங்கி கடுமையாக சரிந்திருக்கு.. ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலையில்லாமல், தனது தொகுதியில் வெற்றி பெற வேண்டும். கூட்டணியில் ஒரு குறிப்பிட்ட கட்சியை இழுக்க வேண்டுமென்பதற்காக அவர் பேசிய பேச்சு, பெரும் வில்லங்கத்தை ஏற்படுத்திருக்க..’ என்று இலைகள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.. ஏற்கனவே, நதி மாவட்டத்தில், பலாப்பழக்காரர் மற்றும் குக்கர் தரப்பினரின் ஆதரவாளர்கள் கணிசமாக இருக்காங்க.. இருவரும் இணைப்புக்கு தயாராக இருந்தும் சேலத்துக்காரர் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், அவரது வருகைக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்காம்.. இதனால் எந்தவித பிரச்னையும் இன்றி எப்படியாவது சேலத்துக்காரரின் சுற்றுப்பயணத்தை முடித்து அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட இலைக்கட்சியினர் குழப்பத்திலேயே சுற்றிக்கிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தூக்கியடித்தும் குடியும், கும்மாளமுமா லூட்டி அடிக்கும் அதிகாரியின் ஆட்டம் மட்டும் இன்னும் அடங்கவில்லையாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘முத்து மாவட்டத்தின் மாநகராட்சி அலுவலகத்தில் துணை அதிகாரி ஒருவர் குடியும், கும்மாளமுமாக இருக்கிறாராம்.. பல புகார்களுக்கு ஆளான அவரை தென் மாவட்டத்திற்கு தூக்கி அடிச்சிருக்காங்க.. ஆனாலும் அவரது லூட்டி அடங்கவில்லையாம்.. தனது அலுவலகத்திலேயே எப்போதும் மிதந்த நிலையில்தான் இருக்கிறாராம்.. அவருக்கு வரும் பைல்களையெல்லாம் இருப்பு வைத்துக் கொண்டு கல்லா கட்டுகிறாராம்.. நான் ஓகே பண்ணினாத் தான் கமிஷனருக்கு செல்லும் எனக்கூறியே கறக்க வேண்டியதை கறந்து விடுகிறாராம்.. இலை கட்சியின் ஆட்சியின் போது வாங்கி, வாங்கி பழக்கப்பட்ட கை தற்போதும் நீள்கிறதாம்.. லட்சக்கணக்கில் ஊதியத்தையும் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் இப்படி இருந்தால் மக்கள் பணி எப்படி நடக்கும் என அந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஆதங்கப்படுகின்றனராம்.. இவரை லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணித்தால் வசமாக சிக்கி விடுவார் என அந்த அலுவலக வட்டாரத்தில் குரல் ஒலிக்கிறதாம்.. செந்தூர் குமாரா, நீ தான் இந்த அதிகாரிக்கு பாடம் கற்பிக்கணும் என வேண்டுறாங்களாம் மாநகராட்சிவாசிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவரை கூல்படுத்த ஆயிரம் பேருக்கு விருந்து ைவக்கிற இலையில் அல்வாவும் இருக்குமாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆட்சியில் பங்கு கொடுக்க நான் என்ன ஏமாளியா? என இலைக்கட்சி தலைவர் கேட்டதால் உண்மையிலேயே டெல்லி ஆடித்தான் போனதாம்.. பொங்கல் தின்னுவாருன்னு பார்த்தால் இப்படி எரிமலையாகி போனாரேன்னு மலராத கட்சியின் நெல்லை அல்வா ஊர்க்காரர் ஒன்றிய உள்துறை மந்திரியின் காதுல போட்டிருக்காரு.. இதற்கான உண்மையான காரணம் என்னவா இருக்கும் என கேட்டதும், நம்மை தூக்கி எறிவதற்கு இலைக்கட்சி தலைவர் தயாராகி விட்டாருன்னு சொன்னதோடு மட்டுமல்லாமல், நடிகர் கட்சி எப்படியும் தன்னிடம் வந்துடுமென நம்புவதாகவும் சொன்னாராம்.. இதற்கு எப்படி பதில் கொடுத்தால் சரியாக இருக்கும் என யோசிச்ச நிலையில், வாயை திறக்காமல் இருப்பதுதான் நமக்கு நல்லதுன்னு அல்வா ஊர்க்காரர் சொன்னதாக கட்சிக்காரரங்க சொல்றாங்க..
குறிப்பாக மாஜி போலீஸ்காரர் வாய் திறக்காமல் இருந்தாலே பாதி பிரச்னை முடிந்துவிடும் என்பதால், உடனே உள்துறையானவர் இனிமேல் கூட்டணி குறித்து வாயை திறக்கவே கூடாதுன்னு மாஜி போலீஸ்காரருக்கு பூட்டு போட்டுட்டாராம்.. இப்படியாக இலைக்கட்சி தலைவரை சமாதானம் செஞ்சதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. மேலும் அவரை கூல்படுத்துவதற்கான வேலையிலும் அல்வா ஊர்க்காரர் இறங்கியிருக்காராம்.. இலைக்கட்சி தலைவர் பிரசாரத்துக்கு அல்வா நகரத்துக்கு வரும்போது அறுசுவை விருந்து படைக்கும் திட்டத்தையும் வச்சி இருக்காராம்.. ஆடி மாதம் இலைக்கட்சி தலைவர் என்னெல்லாம் சாப்பிடுவாரு என்ற பட்டியலை எடுத்துள்ள அல்வா ஊர்க்காரர் இலைக்கட்சி தலைவரை அசத்தப்போறாராம்.. மலராத கட்சியுடன் கூட்டணி வேண்டாமுன்னு சொல்லும் ரத்தத்தின் ரத்தங்களின் வாயை அடைக்கும் வகையில் ஆயிரம் பேருக்கு சுவையான விருந்து வைக்க இருக்கிறாராம்.. அந்த இலையில் அல்வாவும் இருக்குமுன்னு மலராத கட்சிக்காரங்க சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.