சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் 500 பக்க ஊழல் ஆதாரத்துடன் ஆளுநர், முதல்வருக்கு மனு: பணி நீடிப்பு வழங்க தொழிலாளர் சங்கத்தினர் எதிர்ப்பு
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகநாதன் உள்ளார். இவர் மீதும், முன்னாள் பதிவாளர் தங்கவேலு உள்ளிட்ட 4 பேர் மீதும் பல்வேறு ஊழல், முறைகேடு புகார்கள் எழுந்தன. அதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி பழனிச்சாமி தலைமையிலான இரு நபர் குழு விசாரித்து ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையை தமிழ்நாடு ஆளுநருக்கு உயர்கல்வித்துறை அனுப்பி வைத்துள்ளது.
இதனிடையே பதிவாளராக இருந்த தங்கவேலுக்கு பணி ஓய்வு வழங்கி, ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை அளிக்க துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டார். இந்நிலையில், இந்த மாதத்ேதாடு துணைவேந்தர் ஜெகநாதனுக்கு 3 ஆண்டு பணிக்காலம் முடிகிறது. ஆனால், அவர் மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, 500 பக்க ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் கூடிய ஆவணங்களை இணைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் மனு அனுப்பி வைத்துள்ளது.
அந்த மனுவில் சங்கத்தின் பொதுச்செயலாளர் சக்திவேல் கூறியிருப்பதாவது: துணைவேந்தரும், முன்னாள் பதிவாளர் தங்கவேலுவும் இணைந்து அரசின் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழகத்தில் 2 தனியார் கம்பெனிகளை தொடங்கினர். அரசு கட்டமைப்பை துஷ்பிரயோகம் செய்தல், மோசடி போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சேலம் கருப்பூர் காவல்நிலையத்தில் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கைதான துணைவேந்தர் ஜெகநாதன் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். அவ்வழக்கு விசாரணையும், ஜாமீன் ரத்து விசாரணையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
பழனிச்சாமி ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையில் துணைவேந்தர் ஜெகநாதன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி, ஆளுநர் முன்பு அந்த அறிக்கை மீதான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதியில் பணி நிறைவு செய்யவுள்ள துணைவேந்தர் ஜெகநாதன், பணி நீட்டிப்பு பெற முயற்சி செய்து வருவதாக அறிகிறோம். காவல்துறையின் குற்ற வழக்கு நிலுவை, அரசின் உயர்மட்டக்குழு அறிக்கை மீதான நடவடிக்கை நிலுவை என இரண்டு வகைப்பட்ட சிக்கல்களில் சிக்கியுள்ள அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். அவரaf பதவியேற்ற நாள் முதல் இதுநாள் வரை செய்த முறைகேடுகள், ஊழல், விதிமீறல்கள் அனைத்தையும் ஆவணமாக இணைத்திருக்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.