Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலம் மாவட்டம் வலசையூர் அருகே சுக்கம்பட்டியில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சேலம் : சேலம் மாவட்டம், வலசையூர் அருகே சுக்கம்பட்டி கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டம் மற்றும் வட்டம், வலசையூர் அருகே சுக்கம்பட்டி கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் இன்று (12.06.2024) காலை சுமார் 10.40 மணியளவில் அரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி ஒன்றின் பின்னால் இரண்டு இருசக்கர வாகனங்களில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது, ஆச்சாங்குட்டப்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாத மோதிய விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அளவையராக பணிபுரிந்துவந்த திரு.முருகன் (வயது 30) த/பெ.ராஜி மற்றும் அவரது மனைவி திருமதி.நந்தினி (வயது 25) மற்றும் பூவனூரைச் சேர்ந்த திருமதி. வேதவள்ளி (வயது 28) க/பெ.லட்சுமணன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில், திரு. முருகன் மற்றும் திருமதி. நந்தினி தம்பதியரின் ஒரு வயது குழந்தை கவின் பலத்த காயமடைந்து சிகிக்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தது என்ற துயரகரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.