திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில் பெஞ்சல் புயலால் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி முழுமையாக நிரம்பி ஏரிக்கரை பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் நீரில் மூழ்கியுள்ளது. சோளிங்கர் ஏரியில் இருந்து உபரி நீர் அதிக அளவில் எஸ்.அக்ரஹாரம் ஏரிக்கு வருவதால், ஏரி நிரம்பி கடைவாசல் பெருக்கெடுத்து பாய்ந்து செல்கிறது.
மேலும், ஏரியில் இருந்து மழைநீர் அப்பகுதியில் உள்ள கால்வாயில் பெருக்கெடுத்து வீடுகளை சூழ்ந்துள்ளது. ஏரியிலிருந்து உபரி நீர் கிராம சாலையில் செல்வதால், பொதுமக்கள் சென்று வர அவதி அடைந்து வருகின்றனர். வீடுகளை சுற்றி சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.