திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இந்த மண்டல காலத்தில் நேற்று வரை கடந்த 24 நாளில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது.
சபரிமலையில் இந்த மண்டல காலத்தில் கடந்த வருடத்தை விட அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சில நாட்களில் அதைவிட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
கடந்த 4 நாளில் மட்டும் 3.20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் சபரிமலைக்கு வரும் வழியில் வண்டிப்பெரியார், எருமேலி மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நாட்களில் அதிகாலையில் நடை திறக்கும் போது பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.
நெய்யபிஷேகம் செய்வதற்கும், அப்பம், அரவணை உள்பட பிரசாதங்கள் வாங்குவதற்கும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த வருடம் மண்டல கால பூஜைகளுக்காக நடை திறந்த 24 நாளில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று இரவு வரை பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.