மாஸ்கோ: கடந்த சில தினங்களுக்கு முன் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் ரிக்டர் அளவில் 8.8 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. உலகில் இதுவரை பதிவான நிலநடுக்கங்களிலேயே ஆறாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ரஷ்யாவில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அடுத்த 16 மணி நேரத்திற்குள் 4.4 ரிக்டர் அளவுக்கு மேல் சுமார் 125 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இவற்றில் மூன்று அதிர்வுகள் 6.0 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகின. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஹவாய், அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கைகள் பின்னர் படிப்படியாகத் திரும்பப் பெறப்பட்டன.
இந்த நிலையில், அந்தப் பிராந்தியத்தில் நில அதிர்வுகள் ஓயவில்லை. கடந்த சனிக்கிழமை, கம்சட்காவின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் பூமிக்கு அடியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரஷ்யாவின் குரில் தீவுகளில் 6.7 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 64 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தொடர் நிலநடுக்கங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.