ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி தூண்டுதலில் போராட்டம் திருப்பரங்குன்றத்தில் கலவரம் உருவாக்க சதி: சபாநாயகர் குற்றச்சாட்டு
நெல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நேற்று அளித்த பேட்டி: திருப்பரங்குன்றம் போராட்டம் மக்கள், பக்தர்கள் விரும்பும் போராட்டம் அல்ல. தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க சதி செய்து 50 பேர் வந்துள்ளனர். ஏற்கனவே இந்தியா முழுவதும் கரசேவை என தொடங்கி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன்மூலம் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டோம் என பாஜகவினர் நினைக்கின்றனர்.
இந்த கரசேவை சான்று வைத்துள்ளவர்களுக்கு கேஸ் ஏஜென்சி உரிமம், அரசு வக்கீல் பணி, நீதிபதி பணி ஆகியவை கிடைத்தது. திருப்பரங்குன்றம் போராட்டத்தை முன்னின்று நடத்த பக்தர்களோ, பொது மக்களோ வரவில்லை. ஒரு இயக்கத்திற்கு ஓட்டு வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ்., இந்து முன்னணி ஆகியவை தூண்டுதலில் திருப்பரங்குன்றம் போராட்டம் நடக்கிறது.
இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என எல்லோரும் விரும்புகின்ற மதத்தை வழிபட்டு கொள்ளலாம் என சமூக நீதி கொள்கை கொண்ட ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் எப்படியாவது கலவரத்தை உண்டு பண்ண சதி செய்கின்றனர். 2014ல் ஒரு நீதிபதி தீர்ப்பு, 2017ல் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு, 2021ல் தனி நீதிபதி இளங்கோவன், 2023ல் 3 நீதிபதிகள் என இந்த நான்கு தீர்ப்புகளுக்கும் முரண்பாடான ஒரு தீர்ப்பை நீதிபதி தற்போது வழங்கி உள்ளார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. நல்ல தீர்ப்பு கிடைக்கும். இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.

