Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி துரை வீட்டில் ரூ.11 லட்சம் பறிமுதல்: மனைவி, சகோதரி கைது; வருமான வரித்துறை விசாரணை

திருச்சி: புதுக்கோட்டை அருகே என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துரை வீட்டில் இருந்து ரூ.11 லட்சத்தை வருமான வரித்துறையினர் நேற்று பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரை (எ) துரைசாமி (42). திருச்சியில் ‘ஏ பிளஸ்’ ரவுடி பட்டியலில் இருந்த இவர் மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 4 கொலை வழக்கில் ஒன்றில் விடுதலையாகி உள்ளதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டையில் ஒரு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் -வம்பன் பகுதியில் தைலமர காட்டில் பதுங்கி இருந்தவரை ஜூலை 11ம் தேதி ஆலங்குடி போலீசார் பிடிக்க முயன்றபோது, எஸ்.ஐயை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி செல்ல முயன்றார். அப்போது என்கவுன்டரில் துரை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் ரவுடி துரையின் சகோதரி சசிகலாவின் கணவர் முருகேசன்(50), சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 6ம் தேதி அளித்த புகாரில்,‘‘ சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறேன். எனது மகன் எட்டரை கிராமத்தில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 2018ம் ஆண்டு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால், வலது கணுக்கால் வரை ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டுள்ளது. நான் காட்டி கொடுத்ததால் தான் ரவுடி துரையை போலீசார் கைது செய்ததாக கூறி, எனக்கும் எனது மனைவி சசிகலாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்தேன்.

அப்போது, ரவுடி துரையின் மனைவி அனுராதாவும், சசிகலாவும் என்னை ஆபாசமாக திட்டினர். மேலும், உருட்டுகட்டையால் தாக்கினர். தொடர்ந்து, அனுராதா கத்தியை எடுத்து என் கழுத்தில் வைத்து, என்னிடம் இருந்த ரூ.8 ஆயிரம் பணம், செல்போன், ஏடிஎம் கார்டு மற்றும் மாற்றுத்திறனாளி அட்டை ஆகியவற்றை பறித்து சென்றுவிட்டார்,’’ என கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து திருச்சி உய்யன் கொண்டான் திருமரை சண்முகாநகர் 25வது கிராஸ் பகுதியில் வசிக்கும் அனுராதா (44) வீட்டிற்கு நேற்று மதியம் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் வீட்டில் சோதனை நடத்திய போது ரூ.11 லட்சம் சிக்கியது. இதுபற்றி வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து அனுராதாவிடம் ரூ.11 லட்சத்துக்கான ஆவணங்களை கேட்டு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். ஆவணங்கள் இல்லாததால், பணத்தை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, அனுராதா, சசிகலா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.