பெங்களூரு: பெங்களூரு பாரதிநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பிரபல ரவுடி சிவபிரகாஷ் (எ) பிக்லுசிவாவை பத்து பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக பாரதிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிவபிரகாஷின் தாயார் விஜயலட்சுமி, பாரதிநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், எனது மகன் சிவபிரகாஷ், வீட்டில் இருந்து வெளியில் வந்தபோது, ஸ்கார்பியோ காரில் வந்த சுமார் 8 முதல் 10 பேர் அவனை கொலை செய்தனர். எனது மகனை கொலை செய்தவர்களின் அடையாளம் எனக்கு தெரியும். ஜெகதீஷ், கிரண், விமல், அனில் ஆகியோர் கொலைக்கு காரணம்.
மேலும் எனது மகனை முன்னாள் அமைச்சரும் கிருஷ்ணராஜபுரம் தொகுதி பாஜ சட்டப்பேரவை உறுப்பினருமான பைரதி பசவராஜ் தூண்டுதல் பேரில் கொலை நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாரதிநகர் போலீசார் . ஜெகதீஷ், கிரண், விமல், அனில் மற்றும் முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பைரதி பசவராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் பைரதி பசவராஜ் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.