Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செம்மரம் கடத்தல், கொலை என 33 வழக்குகளில் தொடர்பு; பிரபல ரவுடி மாடு தினேஷ் துப்பாக்கி முனையில் கைது: சென்னை அதிதீவிர குற்றப்பிரிவு நடவடிக்கை

சென்னை: செம்மரம் கடத்தல், கொலை உட்பட 33 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி மாடு தினேஷ் என்பவனை சென்னை அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார் காட்பாடி அருகே துப்பாக்கி முனையில் கைது செய்தனர். சென்னையில் கொலை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபடும் ரவுடிகளை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் கைது செய்து வருகின்றனர். குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை போலீசார் ஏ பிளஸ் கேட்டகிரி, ஏ கேட்டகிரி, பி கேட்டகிரி மற்றும் சி கேட்டகிரி என 4 வகையாக பிரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல்துறைக்கு என போலீஸ் கமிஷனர் அருண் அதிதீவிர குற்றப்பிரிவு என தனியாக ஒரு பிரிவு தொடங்கி சென்னையில் குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கமிஷனரின் அதிரடி நடவடிக்கையால் 80 சதவீத ரவுடிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடிகள் கமிஷனர் அருண் நடவடிக்கைக்கு பயந்து ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களுக்கு தப்பி ஓடிவிட்டனர். இருந்தாலும் தப்பி ஓடிய ஏ பிளஸ் கேட்டிகிரி ரவுடிகளை அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர். இந்த அதிரடி நடவடிக்கையால் தற்போது சென்னையில் ரவுடிகள் மோதல்கள், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. இருந்தாலும் வெளிமாநிலங்களில் பதுங்கி சென்னையில் கொலை, ஆள்கடத்தல் மற்றும் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடும் ரவுடிகளின் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்(எ)மாடு தினேஷ்(39).

ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடியான இவர் மீது, செம்மரம் கடத்தல், கொலை, ஆள் கடத்தல், ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பணம் பறித்தது என மொத்தம் 33 வழக்குகள் நிலுவையில் உள்ளது. செம்மரம் கடத்தல் தொடர்பாக ஆந்திரா மாநிலத்தில் ரவுடி மாடு தினேஷ் மீது 5 வழக்குகள் உள்ளது. சென்னையில் போலீசாரின் கைதுக்கு பயந்து மாடு தினேஷ் கடந்த 2010 முதல் ஆந்திரா மாநிலத்தில் தலைமறைவாகிவிட்டார். இருந்தாலும் ரவுடி மாடு தினேஷ் தனது நண்பர்கள் மற்றும் தனது ஆட்கள் மூலம் சென்னையில் கொலை, கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அருண் கவனத்திற்கு அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார் கொண்டு சென்றனர். அப்போது ரவுடி மாடு தினேஷை கைது செய்ய போலீசாருக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

அதன்படி ரவுடி மாடு தினேஷை கைது செய்ய அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஓராண்டாக தேடி வந்த நிலையில், ரவுடி மாடு தினேசுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி கடைசியாக வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஒரு கிராமத்தில் பதுங்கி குற்றங்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. அதைதொடர்ந்து அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார் காட்பாடி அருகே கடந்த ஓராண்டுக்கு மேலாக பதுங்கி சென்னையில் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி மாடு தினேஷை நேற்று இரவு துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரவுடி மாடு தினேஷை அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார் சாலை மார்க்கமாக சென்னை மாதவரத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு சூளைமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் பின்னணியில் உள்ள ரவுடிகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.