ஊட்டி : ஊட்டி ரோஜா பூங்காவில் முதல் இரு பாத்திகளில் மலர்கள் உதிராமல் உள்ளதால், இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கும். இது, இரு மாதங்களுக்கு மேல் நீடிக்கும்.
இந்த மழையின்போது, சூறாவளி காற்று அதிகமாக காணப்படும். இச்சமயங்களில் ரோஜா பூங்கா செடிகளில் உள்ள ரோஜா மலர்கள் அனைத்தும் உதிர்ந்துவிடும். இதனால், ஜூலை மாதங்களில் ரோஜா பூங்காவில் உள்ள செடிகளில் அதிகளவு மலர்களை காண முடியாது.
இச்சமயங்களில் மலர் செடிகள் மற்றும் புல் மைதானங்களை பராமரிக்கும் பணிகளில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபடுவார்கள். இம்முறை தென்மேற்கு பருவமழை மே மாதம் துவங்கிய போதிலும், தொடரவில்லை. துவக்கத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே கொட்டியது.
அதன்பின், பெரிதாக மழை பெய்யவில்லை. நாள்தோறும் சாரல் மழை மட்டுமே காணப்படுகிறது. மேலும், காற்றின் வேகமும் சற்று குறைந்தே உள்ளது. துவக்கத்தில் ரோஜா பூங்காவில் உள்ள மலர் செடிகளில் இருந்த மலர்கள் அழுகி உதிர்ந்த போதிலும், அதன் பின் மலர்கள் உதிராமல் உள்ளது.
தற்போது பூங்காவில் உள்ள முதல் இரு பாத்திகளில் உள்ள செடிகளில் மலர்கள் பூத்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்ட போதிலும், இங்கு பூத்து குலுங்கும் ரோஜா மலர்களை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
அதேபோல், புல் மைதானங்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அவைகளும் பச்சை கம்பளம் விரித்தார்போல், பச்சைபசேல் என காட்சி அளிக்கிறது.


