Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குளித்தலை அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் விரைவில் வருகிறது ‘ரோப் கார்’

*தலைமை பொறியாளர் தகவல்

குளித்தலை : குளித்தலை அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப் கார் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று தலைமை பொறியாளர் பெரியசாமி தகவல் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் உள்ள ரத்னகிரீஸ்வரர் கோயில் 1500 அடி உயரம் கொண்ட சிவன் கோயிலாகும். அந்த கோயிலுக்கு ரோப் கார் வசதி வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கைக்கு கடந்த 2010ம் ஆண்டு கலைஞர் ஆட்சியிலேயே அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன் பிறகு வந்த ஆட்சியாளர்கள் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில், இந்து சமய அறநிலை துறை அமைச்சராக சேகர் பாபு பொறுப்பேற்ற பிறகு அய்யர்மலை உச்சிக்கே வந்து ஆய்வு செய்து பணிகளை விரிவுப்படுத்தி முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த பணி எப்போது முடியும், ரோப்கார் எப்போது வரும் என பொதுமக்கள் பக்தர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள் என கடந்த சட்ட சபை கூட்டத்தொடரில் குளித்தலை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் கேள்வி எழுப்பி கோரிக்கை வைத்தார்.

அப்போது பதிலளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 2021ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி அந்த கோயிலில் ரோப் கார் மக்கள் பயன்பாட்டிற்கு அன்றைய அரசால் அர்ப்பணிக்கப்பட்டதாக கல்வெட்டு இருக்கிறது. பணிகள் முடிவு பெறாத நிலையில் தவறான தகவல் அடிப்படையில் அந்த ரோப் காரை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக அறிவித்து விட்டார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் வைத்த கோரிக்கையை ஏற்று அய்யர்மலைக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தோம். அங்கு பக்தர்கள் காத்திருப்பு கூடம், கழிப்பிட, குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்துவதற்கு உண்டான வாகன நிறுத்தும் வசதியை செய்வதற்கு முதல்வரின் உத்தரவை பெற்று ₹2.95 கோடியில் அமைப்பதற்கு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மார்ச் மாத இறுதிக்குள் ரோப்கார் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகும் நிலையில், இந்து அறநிலையத்துறை சென்னை தலைமை பொறியாளர் பெரியசாமி தலைமையில் எம்எல்ஏ.மாணிக்கம், கண்காணிப்பு பொறியாளர் லால்பகதூர், திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமரகுரு, செயல் அலுவலர்கள் அமரநாதன், தங்கராஜ் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று ரோப்காரில் மலை உச்சிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

இதுபற்றி தலைமை பொறியாளர் பெரியசாமியிடம் கேட்டபோது, அனைத்து பணிகளும் முழுமையாக நடைபெற்று முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடும் நிலையில் உள்ளதால் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இந்த ஆய்வு அறிக்கையை சென்னை சென்று அறநிலையத்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் அதன் பிறகு அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.