சென்னை: விஐடி கல்லூரி சார்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரோபோடிக்ஸ் இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. கோடைக்கால விடுமுறையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், வி.ஐ.டி சென்னையின் கணினி அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறை, சிவில் இன்ஜினியரிங் மற்றும் அட்வான்ஸ் சயின்ஸ் துறை ஆகியவை இணைந்து ரோபோடிக்ஸ் பயிற்சி அளிக்கும் இலவச முகாமினை நடத்தியது. கடந்த 13ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.
இம்முகாமில் ரத்தினமங்கலம், மேலக்கோட்டையூர் அரசு உயர்நிலை பள்ளிகள், மாம்பாக்கம், கண்டிகை, ஓட்டேரி அரசு மேல்நிலைப்பள்ளி, கீரப்பாக்கம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் 5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு ரோபோக்கள் மற்றும் டிரோன்கள் தயாரிப்பது மற்றும் இயக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், ரோபோக்கள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு உணவு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வி.ஐ.டி சென்னையின் நிதி உதவியின் கீழ் வழங்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவு விழாவில் விஐடி துணைத் தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் பங்கேற்று சிறப்பாக பயிற்சியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
விழாவில், கணினி அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறையின் டீன் இரா.கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 5 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் விஐடி சென்னையின் பேராசிரியர்கள் முனைவர்.த.சத்தியன், முனைவர்.வ.அருண்குமார், முனைவர்.வெ.வாசுகி, முனைவர்.வி.வித்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.